மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் காவிரி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கொள்ளிடம் திட்டுபடுகை கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்ததை அடுத்து அங்கிருந்த மக்கள் வெளியேறி வருகின்றனர்.

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிக தீவிரமடைந்தது. அதன் காரணமாக கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. அதனால் கிருஷ்ணராஜா சாகர் மற்றும் கபினி உள்ளிட்ட அணைகளில் நீர் வழிந்து வருவதினால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

நிரம்பி வழியும் மேட்டூர் அணை

அதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

காவிரி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பாக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி கடலில் வந்து கலக்கும் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தண்ணீர் சூழப்பட்ட கிராமங்கள்

இந்நிலையில் காவிரி உபரி நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு வங்க கடலில் கலந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமமான சந்தைபடுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

நாதல்படுகை கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்து தண்ணீர் செல்வதால் அக்கிராமத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கரையில் அமைந்துள்ள தற்காலிக முகாம்களுக்கு வரதொடங்கியுள்ளனர். தீயணைப்பு மீட்புத்துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், மருத்துவக் குழுவினர், காவல் துறையினர், படகுகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படும் கிராமங்களில் முகாமிட்டுள்ளனர்.