தஞ்சாவூர்: மத்திய அரசு வேலை வாய்ப்பு உங்களுக்காக வந்திருக்கு. பாரத் எலெக்ட்ரானிக்ஸில் 47 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க. பி.இ., பி.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நல்ல வேலை வாய்ப்பு... தஞ்சை மாவட்ட பட்டதாரிகளே மிஸ் பண்ணிடாதீங்க.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் 47 பயிற்சி பொறியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு.. சம்பளம் ரூ.30,000. வரும் நவம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மத்திய அரசின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited - BEL) நிறுவனத்தில், காலியாக உள்ள பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களுக்காக மொத்தம் 47 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது மத்திய அரசு வேலை என்பதால், தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.இ/ பி.டெக்/ பி.எஸ்சி பொறியியல் (4 ஆண்டு படிப்பு) / எம்.இ.,/எம்.டெக்.,அல்லது எம்.சி.ஏ., முடித்திருக்க வேண்டும். குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற தொடர்புடைய பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தளர்வுக்கு உட்பட்டவர்களும் நம்பிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பக் கட்டணம் SC / ST / PwBD பிரிவினருக்கு இல்லை. மற்ற பிரிவினர் ரூ.150/- + 18% GST கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வு முறையானது விண்ணப்பதாரரின் தகுதியை சரியாக மதிப்பிடுவதை உறுதி செய்கிறது.

விண்ணப்ப செயல்முறை கடந்த 21.10.2025 முதல் தொடங்கி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 05.11.2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bel-india.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது அவசியம். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வேலை வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.