தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சுற்றுலா வளர்ச்சிக்குழுமம் சார்பில் பிரமாண்ட கோலப்போட்டி நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட கோலங்கள் வரையப்பட்டது. இதில் சிறந்த 3 கோலங்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மேல வீதியில், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் பொங்கல் கோலப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நமது பண்பாட்டின் சான்றாக, புள்ளிக் கோலங்கள் மட்டுமே வரைய அனுமதிக்கப்பட்டது. சுமார் 300 மீட்டர் தூரம் முழுவதும் வெள்ளை புள்ளிக் கோலங்கள் பிரமாண்டமாக வரையப்பட்டன. பங்கேற்ற அனைவரும் சிறப்பான முறையில் புள்ளிக் கோலங்களை வரைந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வி பெண்கள் அமைப்பின் சார்பில் சிறப்பு பரிசுகளும் பாம்பே ஸ்வீட் சார்பில் இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதில் மேல அலங்கத்தைச் சேர்ந்த கீதா முதல் பரிசையும், மங்களபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி இரண்டாவது பரிசையும், மேல வீதியைச் சேர்ந்த கிருத்திகா மூன்றாவது பரிசையும் பெற்றனர். இவர்களுக்கான பரிசுகளை தஞ்சாவூர் ஹெரிடேஜ் சிட்டி இன்னர்வீல் சங்கத்தினர் மற்றும் புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மென்டல் ஸ்டோர் நிறுவனத்தார் வழங்கினர்.

மேலும், மகாராஜா சில்க்ஸ் சார்பில் 10 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன கோலங்களைப் பார்த்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டினர்.

இதில் மாமன்ற உறுப்பினர் சசிகலா, இன்னர்வீல் சங்கத் தலைவர் உமையாள் சுப்பிரமணியம், வி பெண்கள் அமைப்பு நிறுவனர் டாக்டர் உஷா நந்தினி விசுவநாதன், தலைவர் கீதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் சிறப்பாக செய்திருந்தார். 300 மீட்டருக்கும் மேல் வரையப்பட்டு இருந்த கோலங்கள் சினிமா இயக்குனர் ஷங்கரின் படத்தில் பாடல்கள் போன்று மிகவும் பிரமாண்டமாக இருந்ததாக பொதுமக்கள் தரப்பில் பாராட்டினர். நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்த சுற்றுலா வளர்ச்சிக்குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமாரையும் வெகுவாக பாராட்டினர்.