இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் தற்போது பெருமளவில் அதிகரித்து வருகிறது. முன்பு தயக்கம் காட்டியவர்கள் கூட இப்போது இவிக்களை அதிக அளவில் வாங்குகின்றனர். குறிப்பாக, நகரங்களில் நிலவும் டிராஃபிக் நெரிசல் மற்றும் பார்க்கிங் இடப்பற்றாக்குறை காரணமாக சிறிய எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்த தேவையை சரியாகப் பூர்த்தி செய்யும் வகையில், பிரபல ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் தனது புதிய காம்பேக்ட் எலெக்ட்ரிக் காரான 'நிஸான் பிக்ஸோ'வை (Nissan Pixo EV) அறிமுகப்படுத்தி சந்தையில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி பயன்பாட்டிற்கு பிரத்யேக கார்

நகர்ப்புற தினசரி பயன்பாட்டிற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், ஸ்போர்ட்டியான வடிவமைப்பு மற்றும் சிறிய இடத்திலும் எளிதாக பார்க் செய்யும் வசதியை கொண்டுள்ளது. இந்த காரின் துல்லியமான விலை இன்னும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது பாக்கெட்டுக்கு ஏற்ற பட்ஜெட் விலையிலும், மிகவும் குறைவான பராமரிப்புச் செலவிலும் இயங்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சந்தையில் உள்ள மற்ற சிறிய எலெக்ட்ரிக் கார்களுக்கு நேரடி போட்டியாக அமையும்.

இந்த காரின் மிகப்பெரிய சிறப்பம்சம் இதன் டிரைவிங் ரேஞ்ச் ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 259 கிலோ மீட்டர் வரை சிறப்பான ரேஞ்ச் கொடுக்கும். தினசரி அலுவலக பயணம் மற்றும் வார இறுதி ஷாப்பிங் செல்ல இது போதுமானதாகும். இதனால் அடிக்கடி சார்ஜ் செய்யும் தொல்லை இருக்காது. மேலும், இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் எதிர்பார்க்கப்படுவதால், சில நிமிடங்களிலேயே பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, நிஸானுக்கே உரிய மூடப்பட்ட இவி கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் முரட்டுத்தனமான பம்பர் ஆகியவை வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஏரோடைனமிக் வடிவம் காற்றின் எதிர்ப்பைக் குறைத்து பேட்டரி திறனை அதிகரிப்பதோடு மைலேஜுக்கும் உதவுகிறது.

என்னென்ன வசதிகள்?

வெளியில் சிறியதாக தெரிந்தாலும், 4 பயணிகள் வசதியாக அமரும் வகையில் இதன் கேபின் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் கூடிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட் போன்ற பல பிரீமியம் வசதிகள் இதில் உள்ளன.

பாதுகாப்பிலும் நிறுவனம் சமரசம் செய்யவில்லை. உறுதியான கட்டுமானத்திற்கு அதிக வலிமை கொண்ட எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஏர்பேக்குகள், ABS, EBD, ரியர் பார்க்கிங் சென்சார்கள், மற்றும் ரிவர்ஸ் கேமரா ஆகியவற்றுடன், லேன் டிப்பார்ச்சர் வார்னிங், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அதிநவீன ADAS அமைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.