சமீபகாலமாக ஆட்டோமொபைல் சந்தையில் வாகனங்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளது.

அக்.1 முதல் தங்களது அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் 1 சதவீதம் வரை உயர்த்துவதாக டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

என்ன காரணம்?

வாகன உற்பத்திக்கான மூலப்பொருட்களான ஸ்டீல், அலுமினியம் ஆகியவற்றின் விலையும், தளவாடச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். இந்த கூடுதல் செலவின் ஒரு பகுதியை நிறுவனம் ஏற்றுக்கொண்டாலும், வர்த்தக நிலைத்தன்மையைப் பராமரிக்க வாடிக்கையாளர்கள் மீதும் சுமை ஏற்றப்படுகிறது.

இதன் காரணமாக புதிய லாரிகள், பேருந்துகள், பிக்கப் மற்றும் கமர்ஷியல் யூட்டிலிட்டி வாகனங்களை வாங்குபவர்கள் சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். வாடிக்கையாளர்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படாதவாறு, மாடல், வேரியண்ட் மற்றும் பேலோடு திறன் ஆகியவற்றைப் பொறுத்து இந்த விலை உயர்வு மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய விலை உயர்வுகள் (Passenger & Commercial)

இந்த ஆண்டில் டாடா வர்த்தக வாகனங்களின் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஏப்ரல் 1, 2026 அன்று 1.5 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டது. இருப்பினும் இந்தத் துறையில் வாகனங்களுக்கான தேவை சந்தையில் வலுவாகவே காணப்படுகிறது. அதேபோல, டாடா பயணிகள் வாகனங்களுக்கும் ஜூலை 1, 2026 முதல் 1.5 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டது. அதன் ICE வாகனங்களின் விலையும் கடந்த ஏப்ரலில் சற்று அதிகரிக்கப்பட்டது.

ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய நிலை

டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி மாருதி சுசுகி, ஹூண்டாய், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மற்றும் சொகுசு கார் தயாரிப்பாளர்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி ஆகிய நிறுவனங்களும் உற்பத்தி செலவுகளைச் சமாளிக்க தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன. மூலப்பொருட்களின் விலை இதேபோல் அதிகமாக தொடர்ந்தால், வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மற்ற நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கலாம் என ஆட்டோமொபைல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.