TVK Pongal Festival: கோவில்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றார்.

தவெக சமத்துவ பொங்கல் திருவிழா..

தை பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் பகுதியில் உள்ள மலை அலங்காரியம்மன் திருக்கோவிலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளிவர வேண்டியும், 2026 சட்ட மன்ற தேர்தலில் த. வெ. க. மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பு ஏற்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டி சமத்துவ பொங்கல் விழா மற்றும் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

விளையாட்டு போட்டி

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும் மியூசிக்கல் சேர், பாட்டுக்கு பாட்டு போட்டி நடைபெற்றது. பாட்டுக்கு பாட்டு போட்டியில் பெண்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடி அசத்தினர். இதில் சிவாஜி நடித்த ராஜபார்ட் தங்கதுரை பாடத்தில் இடம் பெற்ற பாடலை ஒரு பெண்மணி பாடிய போது கண்ணீர் விட்ட காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

வெற்றியாளர்களுக்கு பரிசுகள்

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான பாலசுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார். மேலும் கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட இணைச்செயலர் கருப்பசாமி, துணைச் செயலர் சத்யா சுரேஷ், பொருளாளர் செல்வின் சுந்தர், செயற்குழு உறுப்பினர் உஷாராணி, நகரப் பொறுப்பாளர் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.