காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர் பணியின்போது, மது அருந்துவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அண்ணா அரசு மருத்துவமனை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேரறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

மருத்துவமனையில் மது அருந்தும் வீடியோ

இந்தநிலையில், மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வரும் இளையராஜா, பணியின் போது அண்மையில் மருத்துவமனை வளாகத்திலேயே, மது அருந்தி உள்ளார். இதனை சிகிச்சை பெற வந்த நோயாளியின் உறவினர் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள், இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மதுபோதையில் மருத்துவ பணியா ?

மேலும் பணி நேரத்தில் மதுவை குடித்துவிட்டு, போதையில் எவ்வாறு, விபத்தில் காயமடைந்த நோயாளிகளுக்கு தையல் போட முடியும், நோயாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து எப்படி அழைத்துச் செல்ல முடியும் என சமூக வலைதளத்தில் அவரை வினாவி வருகின்றனர்.

எனவே மருத்துவமனை நிர்வாகம், பணி நேரத்தில் மது அருந்திய மருத்துவ உதவியாளர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்த மருத்துவமன முதல்வர் மருத்துவர் ஜெயபாரதி, இது தொடர்பான புகார் வீடியோ ஆதாரத்துடன் தங்களுக்கு வந்தது. அதன் பேரில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என்பவர் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அவர்களுடைய தனி வாழ்க்கை எப்படி இருந்தாலும், பணியின் போது ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது. ஒரு சில மருத்துவ ஊழியர்கள் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் நிலையில், ஒரு சிலரின் இதுபோன்ற செயல் மருத்துவத்துறைக்கு கலங்கம் கற்பித்து விடுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.