சேலம்: எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த பட்டதாரி தமிழ் ஆசிரியர் செந்தில்குமரவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி தமிழாசிரியர் செந்தில்குமரவேல் (58) என்பவர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்தி வந்துள்ளார். இந்த தமிழ் ஆசிரியர் செந்தில்குமரவேல் கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியயை சீதாவிடம் மாணவிகள் புகார் தெரிவித்தும், அலட்சியமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பொறுமையை இழந்த மாணவிகள் பெண் குழந்தைகளுக்கான உதவி மைய எண்ணான 1098 ற்கு அழைத்து புகார் தெரிவித்ததின் பேரில் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிந்து, சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயனி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது புகார் தெரிவித்த மாணவிகளிடமும், குற்றம் சாட்டப்பட்ட பட்டதாரி தமிழாசிரியர் செந்தில் குமரவேலுவிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது உறுதி செய்தனர். உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட பட்டதாரி தமிழ் ஆசிரியர் செந்தில்குமரவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

தாய்மொழியாம் தமிழ் மொழியை கற்றுத்தரும் 58 வயதான பட்டதாரி தமிழ் ஆசிரியரே பணி ஓய்வுக்கு இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்சோ சட்டம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.