வணிக வளாகத்தில் பாலியல் தொழில்

சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , தனிப் படையினர் கடந்த 24 ம் தேதி அன்று மேற்கு மாம்பலம் , அரங்கப்பன் தெருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தை கண்காணித்த போது , அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. அதன் பேரில் பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி இடத்தில் சோதனை செய்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வி ( வயது 31 ) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு கண்காணிப்பில் இருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு தலைமறைவு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட செல்வி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சாலையில் நடந்து சென்ற தம்பதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 நபர்கள் கைது

சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வரும் ஏசம்மா ( வயது 35 ) என்பவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24.06.2025 அன்று இரவு ஏசம்மா அவரது கணவருடன் சேர்ந்து கே.கே.நகர், அம்பேத்கர் குடிசை பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது.அடையாளம் தெரியாத இருவர் அவர்களை வழிமறித்து அவதூறாக பேசி, தாக்கி கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

தம்பதியினர் சத்தம் போடவே இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து ஏசம்மா R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து புகார் தாரரிடமிருந்து பணத்தை பறிக்க முயன்ற கே.கே நகர் பகுதியை சேர்ந்த 1.பிரதாப்குமார் ( வயது 30 ) 2.தீபக்குமார் (வயது 28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட தீபக் குமார் என்பவர் R-10 எம்.ஜி.ஆர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் உள்ளதும் , பிரதாப்குமார் மீது ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.