தனியாக வசித்து வரும் மூதாட்டி

சென்னை அயனாவரத்தில் தன்னுடைய சொந்த வீட்டில் மமலாபி ( வயது 75 ) என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது பிள்ளைகள் திருமணமாகி வெளியூர்களில் உள்ளனர். மமலாபி மேல் தளத்தில் வசிக்கும் நிலையில் , வீட்டின் கீழ் தளத்தை பத்ருன்னிஷா பேகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். பத்ருன்னிஷாவுக்கு 50 வயதாகிறது. இந்த பெண்ணுக்கு 14 வயது மகள் உள்ளார். இந்த தாயும், மகளும் அடிக்கடி பாட்டி வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

பாயசம் செய்து தரவா ?

14 வயது சிறுமி பாட்டியின் வீட்டிற்கு இரவில் வந்துள்ளார். அங்கேயே சிறிது நேரம் விளையாடி கொண்டிருந்துள்ளார். பிறகு பாட்டியிடம், உங்களுக்கு பாயாசம் செய்து தரவா ? என்று கேட்டுள்ளார்.

நீ ஆசையாக கேட்பதால் கொஞ்சமாக செய்து கொடு என பாட்டி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியும், பாட்டியின் வீட்டிலேயே பாயாசம் செய்துள்ளார். பிறகு கையோடு கொண்டு வந்திருந்த தூக்க மாத்திரையை பாயாசத்தில் கலந்து பாட்டிக்கு தந்திருக்கிறார் சிறுமி.

சிறுமி ஆசையாக செய்த பாயாசம் என்பதால், பாட்டியும் அதை வாங்கி குடித்து விட்டு சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். மறுநாள் காலையில் கண்விழித்த போது தான், கழுத்தில் அணிந்திருந்த நகைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நகை பற்றி எதுவுமே தெரியாது

பாயாசம் குடித்ததுமே மயங்கி விட்டதால், பத்ருன்னிஷா பேகத்திடமும் , சிறுமியிடமும் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நகைகளை பற்றி எதுவுமே தெரியாது என்று கூறி உள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த பாட்டி மமலாபி, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசாரும் இதுகுறித்த விசாரணையை நடத்தினார்கள். புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த தாய் மற்றும் மகளை அடையாளம் கண்டனர்.

மேலும், கடைசியாக பாட்டியின் வீட்டுக்கு வந்ததும், பாயாசம் தந்ததும் தாய், மகள் என்பதால் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

கடன் அதிகம் - தங்க நகையில் கை வைத்த பேத்தி

விசாரணையில் அவர்கள் இருவருமே குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதற்கெல்லாம் காரணமாக பத்ருன்னிஷா பேகம் இருந்துள்ளார். இவருக்கு குடும்பத்தில் சில கடன்கள் இருந்ததாகவும், அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் இருந்த போது தான், பாட்டி அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டில் வைத்திருந்த மற்ற நகைகளும் நினைவுக்கு வந்துள்ளது.

அதாவது 10 சவரன் நகைகளை பாட்டி உடலில் அணிந்திருப்பாராம். இது தான் பத்ருன்னிஷா பேகம் கண்ணை உறுத்தி உள்ளது. இதற்கு பிறகே 14 வயது மகளிடம் விஷயத்தை சொல்லி, பாயாசம் வைத்து, அதில் மாத்திரையை கலந்து தரும் படி ஐடியா தந்துள்ளார்.

பாட்டிக்கு திட்டமிட்டு மயக்க மாத்திரை கொடுத்து நகை திருடிய குற்றத்திற்காக இருவரையும் போலீசார் கைது செய்தனர். பத்ருன்னிஷா பேகம் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது மகள் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.