தனியார் ஓட்டலில் அறை - 7 வயது மகள் கொலை

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் சொந்தமாக பழைய ஸ்பீக்கர் வாங்கி விற்பது , மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகின்றார். சதீஷ்குமார் தனது ஏழு வயது மகள் ஸ்டெபிரோஸ்சை அழைத்துக் கொண்டு ஆலந்தூர் எம்.கே.எச் சாலையில் உள்ள விஜய் ஃபார்க் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், சதீஷ் தன் அக்கா கெசியா என்பவருக்கு போன் செய்து தான் ஆலந்தூர் விஜய் பார்க் ஓட்டலில் தங்கி இருப்பதாகவும், தனது மகள் ஸ்டெபி ரோஸை கொலை செய்து விட்டேன் என்றும் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

கத்தியால் குத்தி கொலை

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரி கெசியா உடனே ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு ஓட்டலுக்கு விரைந்து சென்றுள்ளார். பின்னர் ஓட்டல் அலுவலர் மற்றும் கெசியா இருவரும் சதீஷ் தங்கியிருந்த அறை எண் (213)-ஐ திறந்து பார்த்த போது சதீஷ் தன் மகளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து , உடனே உயிருக்கு போராடிய சதீஷ்சை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து சதீஷ் சகோதரி கெசியா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பரங்கிமலை போலீஸார் விரைந்து சென்று குழந்தை ஸ்டெபி ரோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேவாலயத்தில் மலர்ந்த காதல்

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் , கடந்த 2017 ஆம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் உள்ள சர்ச்சுக்கு சென்ற போது சதீஸ்க்கும் ரெபேக்காவுக்கும் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னும் சதீஷ் படிக்க வைத்தார். பிறகு அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரெபேக்கா வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே ரெபேக்காவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ரெபேக்கா ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை சொல்லி அடிக்கடி சதீஷ் அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என புகார்

இதனால் ரெபேக்கா ஒரு வருடத்திற்கு முன்பு கணவரை பிரிந்து அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என ரெபேக்கா கேட்டுள்ளார். குழந்தையை தர மறுத்த சதீஷ் தகராறில் ஈடுபட்டு ரெபேக்காவை தரக்குறைவாக பேசியுள்ளார். தன்னை திட்டிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தனது குழந்தையை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த சதீஷ் குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து மனைவியிடம் ஒப்படைத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் விபரீத முடிவு எடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.