தஞ்சாவூர்: தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாள் (செப். 24) முன்னிட்டு, தஞ்சாவூர் அருகே கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3,000 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்று, ஏரியின் 11 கிலோமீட்டர் சுற்றளவிலும் பனை விதைகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களது பங்களிப்பை வழங்கினர்.

ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம்!

தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனையைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளின் இயற்கை வளத்தை மேம்படுத்தவும் ஒரு கோடி பனை விதைகள் நடும் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை தொடக்கி வைத்த மாவட்ட கலெக்டர் ரேவதி

அப்போது அவர் பேசுகையில், "பனை மரங்கள் தமிழகத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குகின்றன. நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் பனை மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பனை வளத்தை அதிகரிப்பதன் மூலம் எதிர்கால தலைமுறைக்கு இயற்கை வளங்களைப் பாதுகாத்து வழங்க முடியும்" என்றார்.

3,000 மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

இந்த மாபெரும் பனை விதை நடும் நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.

மொத்தம் 3,000 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து, செங்கழுநீர் ஏரியின் 11 கிலோமீட்டர் சுற்றளவிலும் பனை விதைகளை நட்டனர்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி, மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குணாநிதி, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், செங்கழுநீர் ஏரி சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் குணசேகரன், மாவட்ட பொறியாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த வேதா, ஏரி சீரமைப்புக் குழுத் தலைவர் குலோத்துங்கன், கவின்மிகு தஞ்சை இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ராதிகா மைக்கேல், தஞ்சை அறிவுசார் நூலக மதியுரைஞர் சுகுமாரன், காமாட்சி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் மருத்துவர் இனியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்களிப்பு

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், மணிகண்டன், வீரமணி, சரவணன் மற்றும் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று பனை விதைகளை நட்டனர்.

"இன்றைய பனை விதை... நாளைய இயற்கை வளம்!" என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்நிலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான முக்கிய முன்னெடுப்பாக அமைந்தது.