குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சுடுகாடு அமைக்க இடம் வேண்டி மனுவுடன் திரண்டு வந்த பொது மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தமிழர் தேசம் கட்சி சார்பில் கள்ளை அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சுடுகாடு அமைக்க இடம் வேண்டி கோரிக்கை மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளை அருந்ததியர் காலணியில் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாத காரணத்தால் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆற்று வாரியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. இப்பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள அரசு இடத்தில் சுடுகாடு அமைக்க இடத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி க்ரூர் மாவட்ட ஆட்சியர், குளித்தலை வட்டாட்சியர், தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்துள்ளனர்.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு மனுவின் மீது தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் குளித்தலை வட்டாட்சியருக்கு அப்பகுதி மக்களுக்கு சுடுகாடு அமைக்க நில அளவீடு செய்து ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக அருந்த்தியர் மக்களுக்கு சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இன்று கோரிக்கை மனு அளித்தனர். நடவடிக்கை இல்லையெனில் தமிழர் தேசம் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவதாக மாவட்ட செயலாளர் அருள்ராஜ் தெரிவித்துளார்.