மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடந்த ஒரு கோர விபத்தில், பள்ளி மாணவன் ஒருவன் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பயணித்த அவனது தாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த தாய், மகன்

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த மைதிலி. இவர் தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழத்தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், சீர்காழி சட்டநாதபுரம் காழி நகர் அருகே தனியார் சுற்றுலாப் பேருந்து ஒன்றின் பின்னால் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

விபத்தில் உயிரிழந்த மகன்

அப்போது பேருந்தை முந்திச் செல்ல மைதிலி முயன்றுள்ளார், இதில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது. இந்த பயங்கர மோதலில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மைதிலியின் இளைய மகன் சரவணகுமார் (11 வயது) நிலைதடுமாறி சாலையில் விழுந்தான். அப்போது துரதிர்ஷ்டவசமாக, அதே நேரத்தில் சுற்றுலாப் பேருந்தின் பின் சக்கரம் அவன் மீது ஏறியது. அதில் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே சரவணகுமார் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்து நடந்த விதமும், சிறுவன் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த காட்சியும் அப்பகுதியில் இருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தாய் மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் படுகாயமடைந்த மைதிலியை, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டி யார்? விபத்துக்கான சரியான காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கவனக்குறைவால் போன உயிர்

சாலை விபத்துகளில் உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகம், கவனக்குறைவு மற்றும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்வது போன்ற காரணங்களால் அடிக்கடி விபத்துகளை சந்திக்கின்றனர். இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்றுவதும், கவனத்துடன் வாகனங்களை இயக்குவதும் அவசியமாகும். சீர்காழி பகுதியில் நடந்த இந்த சோகமான சம்பவம், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

பொதுமக்களின் கோரிக்கை

இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி சட்டநாதபுரம் காழி நகர் பகுதி, போக்குவரத்து அதிகம் உள்ள ஒரு பகுதியாகும். இங்கு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.