மத்தியப்பிரதேச மாநிலத்தில் தங்கள் வீட்டு சிறுமியுடன் காதலில் இருந்ததாக சிறுவனை நிர்வாணமாக்கி சாலையில் இழுத்துச் சென்ற பெண்ணின் குடும்பத்தினர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் காதல் என்பது சிறு வயதிலேயே ஆண், பெண் இடையே தோன்றுகிறது. அறியாத வயதில் தோன்றும் அந்த உணர்வால் சில நேரங்களில் எதிர்பாராத முடிவுகளுக்கு சென்று விடுகின்றனர். பெற்றோர்கள் இதுபோன்ற விஷயங்களை திறம்பட கையாண்டு தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கி வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான அறிவுரை மற்றும் ஆதரவை வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

வீட்டை விட்டு ஓடிப்போன சிறார்கள்

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் மாக்சி சாலையில் உள்ள பன்வாசாவில் தனது தாயுடன் வசித்து வரும் 16 வயதுடைய சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த அதே வயதுடைய ஒரு பெண்ணுடன் காதல் கொண்டிருந்துள்ளான். இந்த ஜோடி கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனிடையே பெண்ணின் குடும்பத்தினர் இருவரையும் தீவிரமாக தேடிய நிலையில் அப்போது அங்கிருந்த ஒரு காவல் நிலையத்தில் பாதுகாப்புக்காக சரணடைந்தனர்.

இதற்கிடையில் சிறுமி சிறார் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவன் ஜெயிலில் அடைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த சிறுவன் விடுதலையாகி தனது தாயுடன் வசித்து வந்தான். அந்த சிறுவனின் தாய் மாற்றுத்திறனாளி ஆவார். இந்த பிரச்னைகளுக்குப் பின் இருவரும் தேவாஸுல் உள்ள தனது அத்தை வீட்டில் இருந்தனர்.

இதற்கிடையில் கடந்த ஜனவரி 14ம் தேதி சிறுவனின் தாய் உடல்நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜைனியில் உள்ள ஸ்ரீ சிந்தெடிக்ஸ் பகுதிக்குச் சென்று தனது நண்பரை தாயின் மருத்துவ செலவுக்கான பண விஷயத்துக்காக அந்த சிறுவன் சந்தித்துள்ளான்.

நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலம்

அப்போது சிறுமியின் குடும்பத்தினர் அச்சிறுவன் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்தனர். நேரடியாக அவனைப் பிடித்து தாக்கியுளனர். சிறுமி குடும்பத்தைச் சேர்ந்த போலா பைராகி, சீமா பைராகி, ராகுல் பைராகி, ருத்ராக்ஷ் பைராகி, விஷ்ணு பைராகி ஆகியோர் அந்த சிறுவனை அடித்து, அவனது ஆடைகளை கிழித்து கைகளை கயிறால் கட்டி சங்கர்பூர் பகுதியிலிருந்து பன்வாசா காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். அந்த சிறுவனின் கோலத்தைக் கண்டு காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் குடும்பத்தினரிடம் இருந்து அவனை மீட்டு தேவையான முதலுதவிகளை செய்தனர்.

இதற்கிடையில் சிறுவன் போலீசாரிடம், “ உஜ்ஜைனிக்கு திரும்பினால் தன்னைக் கொன்றுவிடுவதாக சிறுமியின் குடும்பம் மிரட்டியதாகவும், தன்னை தாக்கும்போது காப்பாற்றும்படி சுற்றியிருந்த மக்களிடம் கெஞ்சிய நிலையில் யாரும் உதவவில்லை” எனவும் கூறி புகார் அளித்துள்ளான். இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, நான்கு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என உஜ்ஜைனி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.