திரிபுராவில் சிபிஐ அலுவலகத்தை குறிவைத்து கொள்ளை கும்பல் கைவரிசையில் ஈடுபட்ட சம்பவம் சிபிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ ஆபிஸில் கொள்ளை:

இந்தியாவின் உச்சபட்ச விசாரணை அமைப்பான சிபிஐ அதிகாரிகளிடமே கொள்ளை கும்பல் கைவரிசையில் ஈடுபட்டிருக்கிறது. இந்த சம்பவம் திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவில் நடந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த ஷியாமலி பஜார் வளாகத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி, சிபிஐ அதிகாரிகள் சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் மாயமாகி இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருடர்கள், அலுவலகத்தில் இருந்த அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். எஃகு அலமாரிகள், நாற்காலிகள், மின்சார உபகரணங்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்களை கூட விட்டுவைக்கவில்லை. ஐந்து மாதங்களாக சிபிஐ அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்:

சிபிஐ இன்ஸ்பெக்டர் அனுராக் புகார் அளித்ததை அடுத்து, திருட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் பிப்லாப் தேபர்மா மற்றும் ராஜு பௌமிக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அகர்தலாவின் புறநகரில் அமைந்துள்ள ஷியாமலி பஜார் மற்றும் கெஜூர் பாகன் பகுதிகளில் இருந்து மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

எட்டு எஃகு அலமாரிகள், ஏழு மர நாற்காலிகள், நான்கு ஜன்னல்கள், வாட்டர் ஹீட்டர் மற்றும் நான்கு சாதாரண நாற்காலிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது போலீஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். வேறு எதையாவது திருட அந்த கும்பல், அலுவலகத்திற்கு வந்ததா அல்லது வேறு பெரிய சதி திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "கைது செய்யப்பட்டவர்களில் சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக உள்ளனர்" என்றார்.

இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்