தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகவும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆட்சேபகரமான நீர் நிலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களை மீள் குடியமர்வு செய்வதற்காக மாநில, ஒன்றிய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நகர்ப்புற ஏழை எளியோருக்கான நிலையான ஒன்றிணைந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வல்லம் பேரூராட்சியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் அய்யனார் கோவில் திட்டப்பகுதி-II-ல் 13 தொகுப்புகளில் 969 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் 408 சதுரஅடி பரப்பளவில் வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டிட தொகுப்பிலும் மின் தூக்கிகள், மின் ஆக்கிகள், இடிதாங்கிகள், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டப்பகுதியில் தார் சாலைகள், அங்கன் வாடி, பால் வழங்கும் நிலையம், சமுதாய கூடம், கடைகள், வாழ்வாதார மையம், நூலகம், நியாய விலை கடை, மழை நீர் சேகரிப்பு அலகு, சுகாதார துணை மையம், இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம், பூங்கா, நடைபாதை, சுற்று சுவர், பாதுகாப்பு அறை மற்றும் பசுமை பகுதி ஆகிய அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டப்பகுதிக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தனி குழாய் பாதை அமைத்து நாளொன்றுக்கு 7.44 இலட்சம் லிட்டர் வீதம் தண்ணீர் வசதி அளிக்கும் வகையில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டப்பகுதியில் 4 (தலா 1.00 இலட்சம் லிட்டர்) கீழ்நிலைத் தண்ணீர் தொட்டிகளும், 162 மேல்நிலைத் தொட்டிகளும் (தலா 5500 லிட்டர்) மற்றும் 1 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் (6.00 இலட்சம் லிட்டர்) அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குடியிருப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி, எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்அய்யனார்கோவில்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதியஅடுக்குமாடிகுடியிருப்புகட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த குடியிருப்பில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பங்களிப்புத் தொகை ரூ. 9 கோடியே 69 லட்சம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சி வழங்க உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரால் இந்தியாவிலேயே முதன்முதலாக 1970-ம் ஆண்டு ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்க கொண்டு வரப்பட்ட அற்புத திட்டங்களில் ஒன்றுதான் “தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியம்”. இந்த வாரியத்தால் இதுவரை 489 திட்டப்பகுதிகளில் 2 லட்சத்து 33 ஆயிரம் 782 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி கடந்த நான்கரை ஆண்டுகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 46 கோடியே 27 லட்சம் மதிப்பில் 504 குடியிருப்புகளும், திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 10 கோடியே 53 லட்சம் மதிப்பில் 80 குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 139 கோடியே 46 லட்சம் மதிப்பில் 936 குடியிருப்புகள் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தலைமை பொறியாளர் வி.எஸ்.கிருஷ்ணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) வேலுமணி, வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம்,துணைத் தலைவர் மகாலெட்சுமி வெங்கடேசன், மேற்பார்வைபொறியாளர்கள் ஜி.கோப்பெருந்தேவி, பிரகாஷ், இளம்பரிதி, நிர்வாகப்பொறியாளர் சி. யோகேஸ்வரன், உதவி நிர்வாகப் பொறியாளர் சரவணன், உதவிப்பொறியாளர் பா.சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.