விழுப்புரம்: விழுப்புரத்தில் பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவனை கடத்தி மிரட்டி விடுத்த பள்ளி மாணவியின் உறவினர் உட்பட ஆறு பேரை மேற்கு காவல் நிலையை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி மாலை மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்றிருந்த போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவனை சரமாரியாக தாக்கி கடத்தி சென்றுள்ளனர்.

மாணவன் வீட்டுக்கு வராததால் பெற்றோர் பல இடங்களில் தேடிவிட்டு விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் பள்ளி எதிரே ஒரு கும்பல் கடத்தி சென்றதை கண்டறிந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கடத்தி சென்ற நபர்கள் குறித்தும், செல்போன் சிக்னலை வைத்தும் போலீசார் விசாரணை தீவிரமாக நடத்தினர்.

அதில் கடலூர் மாவட்டம் தொப்பிலியாகுப்பம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் விமல்ராஜ் ( வயது 27), அதே பகுதியை சேர்ந்த ராகுல்ராஜ் (வயது 29), சீர்காழி சுசீந்திரன் (வயது 25), விருத்தாசலம் அருகே ரோமாபுரியை சேர்ந்த எட்வின்ராஜ் (வயது 28) என்பதும் மேலும் இருவர் சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். செல்போன் சிக்னலை வைத்து நெய்வேலியில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அங்கு சென்று நேற்று மாணவனை மீட்டனர். தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட 8 பேரையும் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் வெளியான விவரம்: கடத்தப்பட்ட மாணவன் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளாராம். அந்த பெண்ணின் உறவினரான சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிறுவனும், கடத்தலில் ஈடுபட்ட விமல்ராஜூம் நண்பர்களாம். அவரது உறவு பெண் அதே தனியார் பள்ளியில் படிப்பதால் ஒருதலைக் காதல் விவகாரம் தெரியவந்து விமல்ராஜிடம் தெரிவிக்கவே இதனை வேளச்சேரியில் உள்ள நண்பரிடமும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வேளச்சேரியை சேர்ந்த சிறுவன், அந்த மாணவனை கடத்தி மிரட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக நண்பரான விமல்ராஜ் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து மாணவனை கடத்தி சென்று மிரட்டியுள்ளது தெரியவந்துள்ளது. சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விமல்ராஜ், ராகுல்ராஜ், சுசீந்திரன், எட்வின்ராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவர் சிறுவர்கள் என்பதால் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.