சேலத்தில் மாணவிகளுக்கு இடையேயான மோதலில் பெற்றோர்கள் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக, தடகளம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, வாலிபால், பேஸ்கட் பால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கான விடுதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முதல்வர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அப்போது, பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவிக்கும் இடையே முன்விரோதம் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விடுதியில் மேலாளர் கோகிலா 2 மாணவிகளின் பெற்றோர்களையும் அழைத்து பேசினார். அப்போது, மாணவிகளின் பெற்றோர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சக வீரர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வந்த சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் இரண்டு மாணவிகளின் பெற்றோர்களையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் கூறுகையில், "முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் எனது மகள் விளையாடுவதை பார்ப்பதற்கு வந்திருந்தேன். அப்போது எனது மகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என விடுதி மேலாளர் அறைக்கு மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக நானும் உடன் சென்றேன். அப்போது பெரம்பலூரை சேர்ந்த மற்றொரு மாணவியின் பெற்றோர் எனது மகளை தாக்கினர். மேலும், அந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் என் மகளிடம் தவறாக நடந்து கொண்டனர். என்னையும் தாக்கினர். இதற்கு விடுதி மேலாளர் உடந்தையாக செயல்பட்டார். விடுதி மேலாளர் கோகிலா மாணவிகள் அறைக்கு சென்று வீடியோ எடுக்கிறார். எனது மகளின் சேமிப்பு உண்டியலை திருடி வைத்துள்ளார். இதற்காக கடந்த மாதம் சென்னைக்கு சென்று விளையாட்டுத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து வந்திருந்தேன்" என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து விடுதி மேலாளர் கோகிலா கூறுகையில், “அவர்கள் கூறுவது போல எந்த ஒரு நிகழ்வும் இங்கு நடக்கவில்லை. இரண்டு மாணவிகளுக்கு ஏற்பட்ட சிறிய சண்டை இது. பேச்சுவார்த்தைக்காக தான் பெற்றோர்களை அழைத்திருந்தேன். இவர்கள் கூறுவது அனைத்தும் பொய். அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை" எனத் தெரிவித்தார்.