சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக பி.எம் ஸ்வநிதி கிரெடிட் கார்டை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

ஒரு லட்சம் பயனாளிகளுக்கான கடனுதவிகளை வழங்கி அவர் பேசியதாவது ;

பிரதமரின் ஸ்வநிதி கிரெடிட் கார்டை அறிமுகம் செய்வதன் வாயிலாக, நாடு தழுவிய அளவில் ஏழைகளுக்கான நலத் திட்டம் துவங்குகிறது. இதன் வாயிலாக, சாலையோர வியாபாரிகள், நடைபாதைகளில் தொழில் செய்வோர் பயனடைவர். இதுவரை சாலையோர வியாபாரிகள் தொழிலுக்காக சில நுாறு ரூபாய்களைக் கூட அதிக வட்டியில் கடனாக வாங்கி வந்தனர்.

இந்நிலையை இந்த கிரெடிட் கார்டு மாற்றி அமைக்கும். முதன் முறையாக நாடெங்கும் லட்சக்கணக்கான சாலையோர வணிகர்கள் வங்கி கடன்களை பெற்று, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகின்றனர். பி .எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டுகள் கேரளாவில் 10,000 பேருக்கு வழங்கப்படுகின்றன.

இதில், 600 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பயனாளிகள். முன்பெல்லாம் வசதி படைத்தவர்களுக்கே கிரெடிட் கார்டு கிடைக்கும். தற்போது, சாலையோர வர்த்தகர்களுக்கும் அது சாத்தியமாகியிருக்கிறது என இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

இதன் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா ?

பி.எம்., ஸ்வநிதி திட்டம், கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வணிகர்களுக்காக, கடந்த 2020 ஜீன் மாதம் துவங்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக, 5 ஆண்டு ஆயுட் காலத்துடன் கூடிய கிரெடிட் கார்டு அறிமுகமாகிறது. யு.பி.ஐ வசதியுடன் இணைந்த இந்த கார்டை பயன்படுத்தி 30,000 ரூபாய் வரை சுழல் நிதிக் கடன் பெறலாம். அக்கடனுக்கு 20 முதல் 50 நாட்கள் வரை வட்டி வசூலிக்கப்படாது.