சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு சபரிமலை ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2040ஆம் ஆண்டு வரையில் முன்பதிவு முடிந்துவிட்டது.

கோவில்களில் பூஜை நடைமுறைகள், தரிசன முறைகள், அபிஷேக ஆராதனை முறைகள் என்று ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமாக பின்பற்றப்படும். இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஐதீகம். அந்த கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் கல்யாண உற்சவம், அபிஷேகம் போன்றவற்றுக்கு பக்தர்கள் தனியாக கட்டணம் செலுத்தி தரிசனம் செய்வதுண்டு. அதே போல் விஷேச நாட்களில் சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் என தனியாக பூஜை முறைகளும் உண்டு.

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தால் தங்கள் வீட்டில் சீக்கிரம் கல்யாணம் நடக்கும் என்று, பக்தர்கள் கட்டணம் செலுத்தி திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவார்கள். அதே போல் குருவாயூர் கோவிலில், பக்தர்கள் எடைக்கு எடை நாணயம், வெல்லம் என விதம் விதமான பொருட்களை நேர்த்திகடன் செலுத்துவார்கள். ஐயப்பனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே சபரிமலையில் ஐயப்பன் சன்னதிக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் பதினெட்டாம்படி பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அங்கு நடைபெறும், மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம், மாதாந்திர பூஜை மற்றும் படி பூஜை என்று சொல்லப்படும் 18 படிகளுக்கும் நடைபெறும் பூஜையும் சிறப்பு வாய்ந்தது. சபரிமலை கோவிலில் பல்வேறு விதமான பூஜை முறைகள் காலம் காலமாக பின்பற்றப்படுகின்றன. உஷத் கால பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை, மாதாந்திர பூஜை, உதயஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம், 1008 கலச பூஜை மற்றும் மாதாந்திர படி பூஜை அகியவை வழக்கமாக நடைபெறுவது வழக்கம். இவற்றில் பிரபலமானது 18 படிகளுக்கு நடத்தப்படும் படி பூஜை.

சபரிமலையில் மிக முக்கியமானதும் அதிக செலவும் உடையது படி பூஜை. இதற்கான கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய். மாலையில் தீபாராதனைக்கு பின், 18 படிகளையும் அலங்கரித்து ஒவ்வொரு படியிலும் பட்டு விரித்து, தேங்காய், பூ வைத்து தந்திரி ஒரு மணி நேரம் பூஜை நடத்துவார். மண்டல கால பூஜை நடைபெறும், 41 நாட்களிலும் படி பூஜை கிடையாது. மகர விளக்கு காலத்தில் மகரஜோதி முடிந்த இரண்டாவது நாள் முதல், நான்கு நாட்கள் படி பூஜை நடைபெறும். இதற்கான முன் பதிவு, 2040 வரை நிறைவு பெற்றுள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

மற்றொரு முக்கிய பூஜை களபாபிஷேகம். சந்தன கட்டையை அரைத்து எடுக்கும் சந்தனத்தை பூஜை செய்து, அதை தங்க குடத்தில் அடைத்து கோயிலை வலம் வந்த பின், ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும். இதற்கான கட்டணம், 38,400 ரூபாய். இது, 2027 வரை முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், 2028 ஜனவரிக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.