கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோவிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர்.

இந்த நிலையில், கோவிலில் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். இதையடுத்து மறுநாள் 31-ந் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் பகல் 11.30 மணிக்கு நெய்யபிஷேகம், 12.30 மணிக்கு உச்ச பூஜை போன்றவை நடைபெறும். பின்னர் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணி முதல் புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும். முன்னதாக மகரவிளக்கையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12-ந் தேதி ஊர்வலமாக புறப்படும். 11-ந் தேதி எருமேலியில் வலியபேட்டை துள்ளல் நடக்கிறது. மகரவிளக்கின் முன்னோடியாக 12, 13-ந் தேதிகளில் சன்னிதானத்தில் சுத்தி கிரியை பூஜைகள் நடைபெறும்.