உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாலை மார்க்கமாக மட்டுமே பக்தர்கள் சென்று வரும் நிலையில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கிறது. சுமார் ரூ.7000 கோடி மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் இதற்கான அனுமதி கேட்டு கேரள அரசு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஐயப்பனை காண தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வருடம் தோறும் பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர்.

தற்போது பம்பை, எரிமேலி வழியாக சபரிமலைக்கு செல்லலாம். கேரளாவுக்கு சென்றதும் அங்கிருந்து சாலை மார்க்கமாக வனப் பகுதிகளுக்கு நடுவே சாலை வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு சபரிமலையில் கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருக்கிறது. இதற்காக பல இடங்களில் நிலம் பார்க்கப்பட்டு தற்போது எரிமேலியில் சுமார் 2400 ஏக்கர் பரப்பளவில் கிரீன் பீல்ட் சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கேரள அரசு தயார் செய்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது. அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, சபரிமலை அருகே இருக்கும் எரிமேலியில் தான் இந்த சர்வதேச விமான நிலையம் ஆனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. விமான நிலையம் அமைக்கப்பட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும், சமூக பொருளாதார பாதிப்புகள் மற்றும் பாதிக்கப்படுபவர்களுக்கு தர வேண்டிய இழப்பீடு உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்ட நிலையில் தற்போது அந்த அறிக்கை தான் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 2400 ஏக்கர் பரப்பளவில் ரூ.7000 கோடி மதிப்பீட்டில் மொத்த செலவு கொண்டதாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. விமானங்கள் பயன்படுத்தும் ஓடுதளம் மட்டும் சுமார் மூன்றரை கிலோமீட்டர் அதாவது 3500 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படுகிறது. விமான நிலைய அமைப்புக்காக மட்டும் சுமார் 5377 கோடி ரூபாயும், இடத்தின் மதிப்பு மற்றும் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்டவருக்காக 2048 கோடி ரூபாய் சேர்த்து மொத்தம் 7047 கோடி ரூபாய் தேவைப்படும் என அவதானிக்கப்பட்டு அந்த அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திருவனந்தபுரம், கொச்சி என கேரளாவில் 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் நிலையில் எரிமேலியில் அமையவிருக்கும் சர்வதேச விமான நிலையம் ஐந்தாவது கேரளாவின் சர்வதேச விமான நிலையமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை பக்தர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சபரிமலைக்கு வருவதற்கு இந்த விமான நிலையம் ஒரு வாய்ப்பாக அமையும் என்கின்றனர். விரைவில் விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் கேரளா அரசு மேற்கொண்டு வருகிறது.