தஞ்சாவூர்: திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. 200 இடங்களில் வெற்றி என ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். நிஜத்தில் வெற்றி பெறப்போவது அதிமுக தலைமையிலான கூட்டணிதான். 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம் பிரச்சாரப் பயணத்தின் போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நடந்த பிரச்சார பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்த எழுச்சி ஆரவாரமே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கிறது. இந்த எழுச்சி பயணத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை கும்பகோணத்தில் பார்க்கிறேன். இன்றைய தினம் ஸ்டாலின் திமுக கூட்டணி பலவாய்ந்த கூட்டணி. 200 இடங்களில் வெற்றி என கனவு கண்டு கொண்டிருக்கிறார். நிஜத்தில் வெற்றி பெறுவது அதிமுக தலைமையிலான கூட்டணிதான். 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி தான் மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது.

இன்று அனைத்து தரப்பு மக்களும் உயர்வடைய காரணம் அதிமுக ஆட்சிதான். நான் முதல்வராக இருக்கும் போது கடுமையான வறட்சி. அப்பொழுது விலைவாசி உயரவில்லை. அதற்குப் பிறகு கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அனைத்தையும் புரட்டி போட்டு சென்று விட்டது. அப்போதும் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம். இதற்குப் பிறகு கொரோனா. 11 மாத காலம் யாரும் வெளியில் வரவில்லை. எந்த தொழிலும் நடக்கவில்லை. அரசுக்கு எவ்வித வருமானமும் இல்லை. அப்போதும் விலைவாசி உயரவில்லை.

ஆனால் இப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து ஐம்பது மாதங்கள் ஆகிறது. விலைவாசி விண்ணை தொடுகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலை என அனைத்து விலையும் உயர்ந்து மக்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அவல ஆட்சி வேண்டுமா?. அது மட்டுமல்ல கட்டுமான பொருட்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எம்சாண்ட், ஜல்லி செங்கல் கம்பி, மரம் என அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. சிமெண்ட் விலையும் உயர்ந்து விட்டது. இனி அனைவரும் கனவில் தான் வீடு கட்ட முடியும்.

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது மாணவர்கள், இளைஞர்கள் சிறப்பு பெற்றார்கள். மாணவர்களுக்கு நல்ல கல்வி அளித்தோம். அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதை செய்தது அதிமுக தான். கொரோனா காலத்தில் மாணவர்கள் சரியாக படிக்க முடியாத நிலை. மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தார்கள். இதை எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். உயர் அதிகாரிகளுடன் பேசி ஆல் பாஸ் என அனைத்து மாணவ, மாணவிகளையும் தேர்ச்சி பெற செய்தது அதிமுக அரசுதான். இதை மாணவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். அதிக பள்ளிகளை திறந்தோம். அதிக கல்லூரிகள் திறந்தோம். 2011 இல் இருந்து 2021 வரை 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் திறக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்து 50 மாத காலம் உருண்டோடி விட்டது. ஆனால் ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட திறக்க முடியவில்லை. ஆனால் 17 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து இந்தியாவிலேயே வரலாற்று சாதனை படைத்தது அதிமுகதான்.

67 கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்தோம். கிராமத்திலிருந்து ஏழை எளிய மக்கள் பட்டப்படிப்பு படிக்கிறார்கள் என்றால் அதற்கு அதிமுக ஆட்சி தான் காரணம். குறைந்த கட்டணத்தில் மாணவ, மாணவிகள் கல்விப் பயில்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் அதிமுக ஆட்சி. இன்று பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர காரணமும் அதிமுக தான். நூற்றுக்கு 54 பேர் பட்டப்படிப்பு படிப்பதற்கான சூழலை ஏற்படுத்தியது அதிமுக தான். 21 பாலிடெக்னிக், 4 பொறியியல் கல்லூரி, 5 வேளாண்மை கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்லூரி. இப்படி ஏராளமான கல்லூரிகளை திறந்து கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து மாணவச் செல்வங்கள் அற்புதமான வாழ்வை கொடுத்தது அதிமுக அரசுதான்.

இன்று ஸ்டாலின் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமிக்கு படிப்பு என்றால் கசக்குகிறது என்கிறார். படிப்பு இனித்ததால் தான் இத்தனை கல்லூரிகளை திறந்தோம். திமுக அன்றாட செய்திக்காக அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்ற மாயத் தோற்றத்தை, பொய்யான தோற்றத்தை பொய்யான செய்தியை வெளியிட்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தான் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் இருந்தபோது . ஒரே நேரத்தில் 20,000 ஆசிரியர்கள் நியமித்து சரித்திர சாதனை படைத்தார். ஒரே நாளில் பணி ஆணை வழங்கினார். திமுக ஆட்சியில் இப்படி செய்யப்பட்டதா. இன்று ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக மாற்றும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தனர். இப்போது பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்றைய திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் போராடுகின்றனர். ஆசிரியர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சியில் எதுவும் கிடைக்கவில்லை. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்துவோம் என்று தெரிவித்தனர். ஆனால் 100 நாள் திட்டம் தற்போது 50 நாட்களாக குறைந்து விட்டது. கல்வி கடன் ரத்து என்றார்கள். செய்தார்களா. செய்யவில்லை. மாதம்தோறும் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்றார்கள் தந்தார்களா? ரேஷன் கடைகளில் 2 கிலோ சர்க்கரை கொடுப்பேன் என்றார்கள் கொடுத்தார்களா. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கூறினார்கள். ஊர் ஊராக சென்று கூறினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினர். செய்தார்களா.

உதயநிதி ஸ்டாலின் கூறினார் நீட் தேர்வு ரத்திற்கு ரகசியம் உள்ளது என்று கூறினார். இன்னும் ரகசியத்தை பூட்டி வைத்துள்ளார். சொல்லுப்பா மாணவர்கள் கேட்கிறார்கள். அப்படி ஏமாற்று வேலை இதை நம்பி மாணவர்கள் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என எண்ணி முழுமையாக தேர்வில் கவனம் செலுத்தாதால் 25 மாணவ, மாணவிகள் உயிரை விட்டுள்ளனர் இதற்கு முழு பொறுப்பையும் ஸ்டாலின் அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.