செந்தில் பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழி பூங்கா அருகே தி.மு.க தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டதாகவும், கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் வீடு தோறும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் சாதனைகள் தான் எங்கள் ஆயுதம்

“நான் எப்போதும் தேர்தல் களத்தில் பயந்து பின்னோக்கி போனதில்லை. கரூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் வெற்றி பெற்ற அனுபவம் உள்ளது. கோவையிலும் மக்களின் ஆதரவு கிடைக்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற கருத்துக்கு பதிலளித்த அவர், “அவர்கள் தோல்வி பற்றி பேச மாட்டார்கள். உண்மையான நிலையை வாக்காளர்களே தீர்மானிப்பார்கள்” என்றார். மேலும், “முதல்வர் அறிவித்த திட்டங்கள், குறிப்பாக விவசாயிகளுக்கும் தொழில்துறைக்கும் உதவும் அறிவிப்புகள், கோவை வளர்ச்சிக்கு முக்கியம். அவற்றை மக்களிடம் கொண்டு சென்று வாக்குகளாக மாற்றுவோம்” என்றார்.

2021 தேர்தலைத் தொடர்ந்து அ.தி.மு.க வளர்ச்சி அடையவில்லை என்றும், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் தி.மு.கக்கு ஆதரவு அளித்ததை எடுத்துக்காட்டினார். “வாக்கு எண்ணிக்கை நாளில் கோவை யாருடைய கோட்டை என்பது தெளிவாக தெரியும்” எனக் கூறினார். கோவை தெற்கு தொகுதிக்கான வாக்குறுதிகள் குறித்து பின்னர் அறிவிப்போம் என்றும், பிரச்சாரம் விரைவில் தொடங்கும் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.