தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்து வருகிறது. அந்த வகையில் கோலிவுட்டிற்கு இந்த 2024 ஆண்டைப் பொறுத்தவரை இதுவரை பெரியளவில் வெற்றிப்படங்கள் எதும் அமையவில்லை. 2024 பிறந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை பெரியளவில் எந்த படமும் மறக்க முடியாத அளவிற்கு வெற்றிப்படமாக தமிழில் அமையவில்லை.

இந்த சூழலில், அடுத்து வர உள்ள 4 மாதங்கள் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் வெளியாக உள்ளது. இதனால், இந்த 8 மாதங்கள் பெரியளவில் ரசிகர்கள் கூட்டத்தைப் பெற இயலாத திரையரங்குகளில் அடுத்த 4 மாதங்கள் திருவிழாவாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதை காணலாம்.

தி கோட்:

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் இணைந்து நடித்துள்ளனர். சினேகா, லைலா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் மோகன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்.5ம் தேதி ரிலீசாகிறது.

மெய்யழகன்:

நடிகர் சூர்யாவின் தம்பியும், தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவருமாகவும் உலா வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மெய்யழகன். 96 படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.

வேட்டையன்:

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, அமிதாப், பகத், மஞ்சுவாரியர், ராணா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகிறது.

கங்குவா:

நடப்பாண்டில் வெளிவர உள்ள படங்களிலே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக வருகிறது.

அமரன்:

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் முழு நீள ஆக்‌ஷன் படமாக முதன்முறை உருவாகியுள்ள படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது.

விடாமுயற்சி:

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், விடாமுயற்சி படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.