பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீன மடத்திற்கு கீழ் செயல்படும் முக்கிய நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை 293-வது ஆதீனம் மீது வழக்குப் பதிவு

மதுரை 292-வது ஆதீனம் மறைவிற்கு பின் பல ஆண்டு பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீன மடத்தில், ஹரி ஹர ஞானசம்பந்தர் தேசிக்காச்சாரியார் கடந்த 2021-ஆம் ஆண்டு 293-வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றது முதல் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அரசியல் மற்றும் சினிமா தொடர்பாக கருத்துகளை கூறி ஏடாகூடமாக இணையத்தில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். இந்த சூழலில் தற்போது மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கார் விபத்து சர்ச்சை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, மதுரை ஆதீனம் சொகுசு காரில் மே-2ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது, மற்றொரு கார் மோதி சிறிய விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாக கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதில் குறிப்பாக "குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்" தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். அவருடன், அவரது ஓட்டுநரும் அது குறித்து பேட்டி அளித்திருந்தார். இந்த கருத்து இரு மதத்தினர் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியது.

காவல்துறை வெளியிட்ட கார் விபத்து குறித்த சிசிடிவி வீடியோ

இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த, சி.சி.டி.வி., காட்சியை காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டது. மேலும் தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக கூறி அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட வாகன விபத்து குறித்து. தவறான தகவல்களை பரப்பி. மதமோதலை தூண்டும் வகையில் பேசிய, மதுரை ஆதீனத்தின் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கக் கோரி பல இடங்களில் புகார்மனு அளிக்கப்பட்டது.

சென்னை சைபர் கிரைம் வழக்கு

குறிப்பாக சென்னை எழுப்பூர் அருகே, உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 24ஆம் தேதி சென்னை காவல் ஆணையருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில்..,” மதுரை ஆதீனத்துக்கு நடந்த சாலை விபத்து தொடர்பாக, மாநாட்டிலும் பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மற்றும் சமூக ஊடகங்களிலும் அவரை வாகன விபத்து மூலம் கொலை செய்ய சதி வேலை நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். கொலை செய்ய வந்தவர்கள், மத அடையாளத்தில் இருந்தது போன்றும் சொல்லியிருந்தார். இது சிறுபான்மையினர் குறித்து தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் இருந்தது. எனவே மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார். மதுரை ஆதீனத்தின் மீது, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒருவரை தூண்டுதல், வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீன மடத்திற்கு கீழ் செயல்படும் முக்கிய நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.