கொடைக்கானல் மலை சாலையில் சுற்றுலாப் பயணிகள் வேன் பாறையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 சிறார்கள் உட்பட 22 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. மதுரையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்துக்கு மாறாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மதுரை விளாச்சேரி பகுதியைச் சேர்ந்த குலம் ஹஜ்ரத் என்பவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 21 பேர் ஒரு வேனில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். கொடைக்கானலில் அழகை ரசித்து விட்டு மீண்டும் அவர்கள் ஊர் திரும்பி உள்ளனர். இவர்கள் வந்த வேன் கொடைக்கானல் மலைச்சாலையில் டம் டம் பாறை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது வேன் திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறம் இருந்த பாறையில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

அதிவேகமாக பாறையில் மோதி வேன் கவிழ்ந்ததால் வேனில் பயணம் செய்த 13 சிறார்கள் உட்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். வேன் இடிபாடுக்குள் காயத்துடன் சிக்கி தவித்தவர்களை மலைச்சாலையில் வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் மீட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் சுற்றுலா பயணிகளில் வாகனங்களில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து மருத்துவமனையில் குவிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் களை விரைவாக வரவழைத்து காயம் அடைந்தவர்களை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு உறுதுணையாக செயல்பட்டனர். இதனிடையே காயம் பட்டவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் மலை சாலையில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.