VBGRAMG Shanti Bill: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டு வந்த VB-G RAM G மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

125 நாள் வேலைவாய்ப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA), 2005-க்கு மாற்றாக, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விக்ஸித் பாரத், ரோஜ்கார் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா 2025க்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து விரைவில் இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

புதிய சட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கான ஊதிய வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை, ஒரு நிதியாண்டில் 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்துகிறது. வேலை முடிந்த 15 நாட்களுக்குள், தாமதங்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், வாராந்திர கூலி வழங்குவதையும் சட்டம் கட்டாயமாக்குகிறது. விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஆண்டுதோறும் 60 நாட்கள் வரை ஒட்டுமொத்த இடைநிறுத்த காலத்தை அறிவிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முன்பு மத்திய அரசு மட்டுமே முழு நிதிப்பங்களிப்பையும் அளித்து வந்த நிலையில், தற்போது மாநில அரசுகள் 40 சதவிகித நிதி பகிர்வினை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

அணுசக்தி துறையில் தனியார்:

அதோடு, இந்தியாவின் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்புக்கு வழி வகுக்கும் வகையில், சாந்தி என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India - SHANTI) மசோதாவிற்கும் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், விரைவில் இந்த மசோதாவும் சட்டமாக அரசாணையில் வெளியிடப்படும்.

சாந்தி மசோதா, சிவில் அணுசக்தித் துறையை நிர்வகிக்கும் அனைத்து சட்டங்களையும் உள்ளடக்கி, தனியார் நிறுவனங்களுக்கு அதை திறந்து விடுகிறது. இது 1962 ஆம் ஆண்டின் அணுசக்திச் சட்டத்தையும், நாட்டில் அணுசக்தி வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததாக அரசாங்கம் கூறிய அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டத்தையும், 2010 ஐயும் ரத்து செய்கிறது.

புதிய சட்டம் சொல்வது என்ன?

புதிய சட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் அரசாங்கத்தின் உரிமத்திற்கு உட்பட்டு அணு மின் நிலையங்களை உருவாக்கலாம், சொந்தமாக வைத்திருக்கலாம், இயக்கலாம் மற்றும் நீக்கலாம். மூலோபாய மற்றும் முக்கிய உணர்திறன் நடவடிக்கைகள் மாநில கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்பதை மசோதா தெளிவுபடுத்துகிறது. அதேநேரம், யுரேனியம் மற்றும் தோரியத்தை சுரங்கப்படுத்துதல், செறிவூட்டல், ஐசோடோபிக் பிரித்தல், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்தல், உயர் மட்ட கதிரியக்கக் கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் கன நீர் உற்பத்தி ஆகியவை மத்திய அரசு அல்லது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களால் பிரத்தியேகமாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட போதே இந்த இரண்டு மசோதாக்களுக்கும், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.