மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பணிகள் மிகச் சிறப்பாக மேற்கோள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு கிராமப்புற வளர்ச்சிப் பணிகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான திறன் பயிற்சி நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், காலியாக உள்ள ஒரு 'மாவட்ட வள பயிற்றுநர்' (IB & CB) பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி விவரங்கள்

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.06.2026 அன்றைய தேதியின்படி குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியடைந்தவராகவும், 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியை பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் வழக்கமான முறைப்படி (Regular mode) பயின்று முதுகலைப் பட்டம் (Post Graduate Degree) பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மிகச்சிறப்பாக எழுதவும் பேசவும் கூடிய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முந்தைய பணி அனுபவம் மற்றும் பிற திறன்கள்

விண்ணப்பதாரர்கள் கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து மட்டத்திலான கூட்டமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பயிற்றுநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, பல்வேறு நிலைகளில் உள்ள முக்கிய பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சிகள் அளித்ததில் குறைந்தது 4 ஆண்டுகள் தீவிர பணி அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

இதுதவிர, சிறந்த தகவல் தொடர்புத் திறன், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் ஆளுமைத்திறன் மற்றும் பிறருடன் இணக்கமாகப் பழகும் நற்பண்புகள் பெற்றிருக்க வேண்டும். இக்காலகட்டத்திற்கு ஏற்ப கணினி பயன்பாட்டுத் திறன் மற்றும் ஆண்ட்ராய்டு கைபேசி செயலிகளைத் தடங்கலின்றி கையாளும் நடைமுறைச் சாத்தியமான தொழில்முறைத் திறன்களையும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தங்களது விண்ணப்பங்களை வரும் 18.09.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, நான்காம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை" என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கடைசி நாளான 18.09.2026-க்குப் பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் முற்றிலும் வெளிப்படையான முறையில் மாவட்ட தேர்வுக்குழு வாயிலாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். இதில் 50 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், எஞ்சிய 50 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வும் அடங்கும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார். எனவே, தகுதியுடைய நபர்கள் நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு குறித்த காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.