மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகேயுள்ள சி. புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான பிரபாகரன். இவர் தனது விவாகரத்து பெற்ற மனைவியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், மணல்மேடு காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிந்து வாழும் தம்பதியர்

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள சி.புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கும், கார்த்திகா என்பவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், காலப்போக்கில் கருத்து வேறுபாடுகள் மற்றும் குடும்பத் தகராறுகள் தலை தூக்கின. இந்த சண்டைகள் தொடர்ந்து நீடித்ததால், கடந்த ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

முன்னாள் மனைவியை தாக்கிய கணவர் கைது

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபாகரன் தனது முன்னாள் மனைவி கார்த்திகா வசித்து வரும் ராதாநல்லூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரபாகரன் கார்த்திகாவை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கார்த்திகாவை அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு மயிலாடுதுறை மாவட்ட பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மணல்மேடு போலீஸ் நடவடிக்கை

இச்சம்பவம் தொடர்பாக கார்த்திகா மணல்மேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், மணல்மேடு காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன் மற்றும் போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். பிரபாகரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.

காவல்நிலையத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

கைது செய்யப்பட்ட பிரபாகரனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வகையில், மணல்மேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் அவர் அமர வைக்கப்பட்டிருந்த நிலையில், போலீசாரின் அதீத பணி சுமை காரணமாக சிறிது நேரம் அவரை கவணி வில்லை என கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பிரபாகரன், போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் காவல் நிலைய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் தேடுதல் வேட்டை

கைதி தப்பி ஓடியது தெரியவந்ததும், போலீசார் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, பிரபாகரனை தீவிரமாக தேடி வருகின்றனர். மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமூகத்தில் தாக்கம்

ஒரு கைதி காவல் நிலையத்திலேயே இருந்து தப்பியோடிய இந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் போலீசாரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தப்பியோடிய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அலட்சியமாக இருந்த போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.