நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அவரது 171வது படம் கூலி ஆகும். இந்த படம் நாளை உலகெங்கும் ரீலீசாகிறது. ரஜினிகாந்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் மிகப்பெரிய இணைப்பு உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் மட்டும் அவரது 50 ஆண்டு திரை வாழ்வில் 18 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்ட சில படங்கள் அவரது வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

ஆகஸ்டில் வெளியான ரஜினி படங்கள் பட்டியல்:

1. அன்புள்ள ரஜினிகாந்த்
2. கர்ஜனை
3. நான் போட்ட சவால்
4. நான் வாழவைப்பேன்
5. ரகுபதி ராகவன் ராஜாராம்
6. எங்கேயோ கேட்ட குரல்
7. அபூர்வ ராகங்கள்
8. முள்ளும் மலரும்
9. நெற்றிக்கண்
10. ஜானி
11. வள்ளி
12. குசேலன்
13. பாபா
14. ஜெயிலர்

இந்த படங்கள் தவிர தெலுங்கு படமான வயசு பிலிசிண்டி, சிலகம்மா செப்பின்தி, மலையாள படமான கர்ஜனம், இந்தி படமான ஆதங் கி ஆதங் என்ற இந்தி படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் தந்த வெற்றிகள்:

ரஜினி திரையுலகில் முதன்முதலாக அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் 1975ம் ஆண்டு சுதந்திர தினத்தில்தான் வெளியானது. அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அபூர்வ ராகங்கள் படம் மட்டுமின்றி ரஜினியின் நடிப்புத் திறமையை காட்டிய முள்ளும் மலரும் 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

ரஜினி இரட்டை வேடத்தில் அசத்தி வெற்றி பெற்ற ஜானி இதே 1980 ஆகஸ்டில் வெளியாகியது. ரஜினி சபல ஆசை கொண்ட தந்தையாகவும், ஒழுக்கமான மகனாகவும் நடித்து வெற்றி பெற்ற நெற்றிக்கண் 1981ம் ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 1982ம் ஆண்டு வெளியாகி ரஜினிக்கு வெற்றியைத் தந்த எங்கேயோ கேட்ட குரலும் இதே ஆகஸ்டில் வெளியான படம் ஆகும்.

ரஜினிகாந்த் ரஜினிகாந்தாகவே நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படமும் 1984ம் ஆண்டு ஆகஸ்டில்தான் வெளியானது. இந்த படமும் ஓரளவு வெற்றிப் படமாக அமைந்தது. இவை அனைத்தை காட்டிலும் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம் ஆகஸ்டில்தான் ரிலீசானது. இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் ரஜினியின் கம்பேக்கை பறை சாற்றியது.

தோல்விப் படங்கள்:

ஆகஸ்டில் ரஜினிக்கு ஜானி, நெற்றிக்கண், முள்ளும் மலரும், ஜெயிலர் என வெற்றிப் பட்டியல் இருந்தாலும் தோல்விப்படங்களும் உள்ளது. ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த வள்ளி திரைப்படம் இதே ஆகஸ்ட் மாதம் வெளியாகி தோல்வி அடைந்தது. அதேபோல, படையப்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வெளியான பாபா படம் இதே ஆகஸ்ட் மாதம் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியைத் தழுவியது.

சிவாஜி வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிகராக நடித்து வெளியான திரைப்படம் குசேலன். இந்த படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியைத் தழுவியது. ரஜினி தொடக்க காலத்தில் நடித்த நான் போட்ட சவால், சிவாஜியுடன் இணைந்து நடித்த நான் வாழவைப்பேன் படங்களும் ஆகஸ்டில் வெளியானது. இந்த படங்கள் பெரியளவு வெற்றி பெற்ற படமாக அமையவில்லை. விஜயகுமாருடன் இணைந்து நடித்த ரகுபதி ராகவன் ராஜாராம் படமும் இதே ஆகஸ்ட் மாதம்தான் வெளியானது. இந்த படமும் தோல்விப்படமாகவே அமைந்தது.

கூலி வெற்றி பெறுமா?

ரஜினிகாந்த் திரை வாழ்வில் தவிர்கக முடியாத படங்களான அபூர்வ ராகங்கள், ஜானி, முள்ளும் மலரும், நெற்றிக்கண், ஜெயிலர் போன்ற வெற்றிப் படங்களின் வரிசையில் கூலி இணையுமா? அல்லது பாபா, குசேலன், வள்ளி வரிசையில் கூலி இணையுமா? என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.