தஞ்சாவூர்: கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததால் கொதி நிலைக்கு மாறியுள்ள திமுகவினர் விட்டோமா பார் என்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணனை கவிழ்க்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக திடுக் தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க., 38 வார்டுகளிலும், காங்கிரஸ் இரண்டு வார்டுகளிலும், அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், சுயேட்சை எட்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், ஆட்டோ டிரைவரான காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்று கவுன்சிலரான சரவணனை தி.மு.க., தலைமை மேயர் என்று அறிவித்தது.

துணை மேயராக தி.மு.க.,வை சேர்ந்த தமிழழகனை அறிவித்தது. இரண்டு வார்டுகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் முதன்முறையாக மேயராக அறிவித்ததால், தி.மு.க., கவுன்சிலர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர் இது குறித்து கட்சி தலைமைக்கு கொண்டு சென்ற போது, கூட்டணி கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின் திட்டவட்டமாக கண்டிப்புடன் தெரிவித்து விட்டார். இதனால் தி.மு.க., கவுன்சிலர்கள் அமைதியாகினர். இருந்தாலும் மாநகராட்சி கூட்டங்களின் போது மௌனமாக திமுக கவுன்சிலர்கள் கொடுத்த குடைச்சல் தனிக்கதை. டாம் அண்ட் ஜெர்ரி போல்தான் பல கூட்டங்கள் நடந்தது.

தற்போது காங்கிரஸ் கட்சி தி.மு.க., கூட்டணியில் இருந்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்து இருப்பதால், தி.மு.க.,வினர் தங்களின் நெற்றிக்கண்ணை திறந்து உள்ளனர். ராகுல்காந்தி படத்தின் மீது துரோகி என்று எழுதி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கும்பகோணம் திமுகவினரோ கொதிநிலையில் உள்ளனர். எங்கள் ஆதரவால் மேயரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இனி எப்படி அந்த பதவியில் இருப்பார் என்று பார்த்துவிடுகிறோம் என்று சவால் விடுத்துள்ளனராம்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயராக உள்ள சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர தி.மு.க., கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி, கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தரப்பில் கூறியதாவது:

தி.மு.க.,வுக்கு துரோகம் செய்த, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மேயராக இருக்க கூடாது. இதனால் தி.மு.க.,வை சேர்ந்த துணை மேயரான தமிழழகனை மேயராக கொண்டு வரவும், காங்கிரஸ் மேயரான சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். ஆனால் கட்சி தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர். தலைமை தலையசைக்குமா? அல்லது அமைதி காக்க சொல்லுமா என்பதுதான் கும்பகோணம் திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எப்படி இருந்தாலும் கும்பகோணம் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது மட்டும் உண்மையிலும் உண்மை.