இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா களைகட்ட, தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பண்டிகை கால பயண நெரிசலை சமாளிக்க, பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருந்து குலசை திருவிழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே நாளை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வசதி பக்தர்களுக்கு நிச்சயம் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்காக, நாளை திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பக்தர்கள் திருவிழாவில் எளிதாக பங்கேற்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என பல பண்டிகைகள் வருகின்றன. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் செல்ல திட்டமிடுகின்றனர்.

பயணிகளின் வசதிக்காக, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. தெற்கு ரயில்வேயும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்களை அறிவித்து முன்பதிவை தொடங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு அதிக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஊரான குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகர பட்டினத்தில் இங்கு தசரா திருவிழா கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும் ஒரு பெரிய திருவிழா.இந்த திருவிழாவில் தென் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குலசை திருவிழாவில் பங்கேற்பார்கள். பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்பதற்கு வசதியாகவே இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நாளை திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே இந்த முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் செயல்படும். திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருநெல்வேலிக்கு இரவு 10.30 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.