சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த மாதம் சபரிமலைக்கு வருவார் என கூறப்பட்டது. இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்வார் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த17-ந்தேதி திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்.21 முதல் அக்.24 ஆம் தேதி வரையில் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக, கேரள மாநிலத்துக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், இன்று மாலை திருவனந்தபுரம் செல்லும் குடியரசுத் தலைவர் முர்மு, அக்.22 ஆம் தேதி சபரிமலை கோயிலில் தரிசனம் செய்கின்றார். இதனைத் தொடர்ந்து, அக்.23 ஆம் தேதி கேரள ஆளுநர் மாளிகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் சிலையை அவர் திறந்து வைக்கின்றார். மேலும், கோட்டயத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கின்றார்.பின்னர், அக்.24 ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள செயிண்ட் தெரசா கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.