Kilambakkam Traffic diversion: கிளாம்பாக்கத்தில் ஸ்கை வாக் பாலம் பணிகள் நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam Bus Stand

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக, செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியில், புதிய பேருந்து நிலையம் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்திருப்பதால், பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - Kilambakkam Railway Station

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும் என்றால், பேருந்து மூலமாகவோ அல்லது சொந்த வாகனத்திலோ வரவேண்டிய சூழல் இருக்கிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இல்லாததால், பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்காக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிளாம்பாக்கம் ஆகாய நடைமேடை - Kilambakkam Skywalk Bridge

அதேபோன்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் பாதிப்படையாமல் இருக்க, புதிய கிளாம்பாக்கம் ரயில் நிறுத்த நிலையத்தை இணைக்கும் வகையில் ₹100 கோடி செலவில் அமைக்கப்படும் 450 மீட்டர் நீள ஆகாய நடைபாதை (pedestrian skywalk) அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்தது.

இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்ட பிறகும், பணிகள் தொடங்குவது பிரச்சனைகள் இருந்தன. தனியாரிடமிருந்து இந்த திட்டத்திற்காக ஒரு ஏக்கர் நிலம் வரை கையகப்படுத்த வேண்டிய சூழலில் இருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் மூலம் தனியார் நிலத்தின் தேவை 55 சதவீதமாக குறைந்தது. தொடர்ந்து தனியாரிடமிருந்து அந்த 55 சதவீத நிலத்தை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கடந்த சில மாதங்களாக மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில், இருந்து பேருந்து நிலையத்தின் மையப் பகுதி அடையும் வகையில், 400 மீட்டர் நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவற்றின் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை அமைக்கப்படும் உயர்மட்ட நடைபாதை சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது.

போக்குவரத்து மாற்றம் - Traffic Diversion

இந்தநிலையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (14-10-2025) இரவு 8:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் பகுதியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு, காரணைப்புதுச்சேரி சாலை வழியாக ஊரப்பாக்கம் வரை வாகனங்கள் திருப்பி விடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பயணிகள் அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.