ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில், காவல் நிலையத்திற்குள் சென்று காவல்துறையினரை ராணுவத்தினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர், குப்வாரா காவல் நிலையத்தின் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று ராணுவ லெப்டினன்ட் கர்னல்கள் மற்றும் 13 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரச்னை என்ன?

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை இடைப்பட்ட இரவின் போது, போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், ராணுவ ஜவான் ஒருவரை விசாரித்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணையை தொடர்ந்து, ராணுத்தினர் குப்வாரா காவல் நிலையத்தினுள் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு, இருந்த காவல்துறையினரை தாக்கியதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய மற்றும் சீருடை அணிந்த ஒரு குழுவானது, மூத்த இந்திய இராணுவ அதிகாரிகளுடன், காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

வழக்குப்பதிவு:

இந்நிலையில், 3 லெப்டினன்ட் உட்பட 16 ராணுவ வீரர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எப்ஐஆர்-ல் பதிவு செய்யப்பட்டதாவது, ”லெப்டினன்ட் குழுவானது, காவல் நிலைய வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தது. அவர்கள் அங்கு இருந்த போலீஸ்காரர்கள் மீது கொடூரமான தாக்குதலைத் நடத்தினர்.

இராணுவப் பணியாளர்கள் ஆயுதங்களைக் காட்டி, காயமடைந்த காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து மொபைல் போன்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை கடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் 186 (பொதுப் பணிகளைச் செய்வதில் அரசு ஊழியரைத் தடுத்தல்), 332 (அரசு ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்கும் வகையில் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 307 (கொலை முயற்சி), 342 ( தவறான அடைப்பு) மற்றும் 147 (கலவரத்திற்கான தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை:

இந்த சம்பவம் குறித்து குப்வாரா துணை காவல் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார். குற்றத்தின் முழு அளவையும் வெளிக்கொணரவும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், "காவல்துறையினருக்கும் பிராந்திய இராணுவப் பிரிவுக்கும் இடையிலான சிறிய கருத்து வேறுபாடுகள் இணக்கமாக தீர்க்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்