உத்தரப்பிரதேசத்தில் நாய் கடித்த இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் நாய் போல நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, கருத்தடை அறுவை சிகிச்சை ஆகியவை செய்து மீண்டும் தெருக்களில் விடப்படுகிறது. எனினும் பிரச்னைகள் குறைந்தபாடில்லை. அப்படியான ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

அங்குள்ள அலிகார் மாவட்டத்தின் கைர் தாலுகாவில் உத்வாரா கிராமம் உள்ளது. அங்கு விஜய்பால் என்பவரின் மகன் ராம்குமார் (23) என்பவரை டிசம்பர் 20 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நாய் அவரது காலில் கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வீட்டுக்கு திரும்பி தனது குடும்பத்தினரிடம் நாய் கடித்ததைப் பற்றி தெரிவித்தார்.

இதனையடுத்து ராம்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் காயத்தை தண்ணீரைக் கொண்டு கழுவியுள்ளனர். மேலும் அந்த ஊர் வழக்கப்படி, கடித்த இடத்தில் மிளகாய்ப் பொடியையும் தடவியிருக்கிறார்கள். ராம்குமாருக்கும் அந்த காயம் சிறியதாகத் தோன்றியதால் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டார். ஆழமான காயம் எதுவும் இல்லாததால் குடும்பத்தினரும் ராம்குமாரை கண்டுக் கொள்லாமல் இருந்துள்ளனர். ஆனால் அவர் நாய் கடித்து அடுத்த சில மணி நேரம் சாதாரணமாக இருந்துள்ளார்.

ராம்குமார் அன்று இரவு 9 மணி வரை நன்றாக இருந்த நிலையில் குடும்பத்தினருடன் இரவு உணவை சாப்பிட்டார். ஆனால் இரவு 11 மணியளவில், ராம்குமார் தனக்கு ஏதோ நடப்பதாக கூறியுள்ளார். அவரிடம் அமைதியின்மை மற்றும் அசௌகரியமான நிலை இருந்ததை குடும்ப உறுப்பினர்கள் கண்டறிந்தனர். அடுத்த சில மணி நேரத்தில் ராம்குமார் உடல்நிலை மோசமடைந்தது. அவர் தனது உடலை மீண்டும் மீண்டும் சொறிந்து, நாய் போன்ற சத்தங்களை எழுப்பத் தொடங்கினார்.

மேலும் தனது நாக்கை நீட்டி அருகிலிருந்தவர்களை முகர்ந்து பார்க்க தொடங்கினார். தன்னுடைய அருகில் வருபவர்களைக் கடிக்க முயன்றிருக்கிறார். அவரது ஆக்ரோஷமான நடத்தை கிராம மக்களை பயமுறுத்தியுள்ளது. இதனால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ராம்குமார் வீட்டிலிருந்து தப்பித்து ஓடினர். யாரும் அவரை நெருங்கி என்ன நடந்தது என பார்க்க தைரியமில்லாத சூழல் இருந்துள்ளது.

தொடர்ந்து நிலை மோசமான நிலையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ராம்குமாரை கட்டிலில் கட்டி வைத்தனர். டிசம்பர் 21ம் தேதி மாலை அவரை கைர் சமூக சுகாதார மையத்திற்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு ராம்குமார் நாய் போல குரைக்கத் தொடங்கினார். உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் டெல்லியில் உள்ள ஒரு உயர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். அவருக்கு வெறிநாய்க்கடியின் கடுமையான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. பின்னர் ராம்குமார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.