இந்திய கிரிக்கெட் அணி 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டியில் ஆடுவதற்காக இந்திய அணி தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்திய அணியின் மூத்த ஜாம்பவான் வீரர்களும், முன்னாள் கேப்டனுமாகிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்த உலகக்கோப்பையில் ஆட ஆர்வமாக உள்ளனர்.

விஜய் ஹசாரேவில் ரோகித், கோலி:

ஆனால், இவர்கள் இருவரையும் வயதை காரணம் காட்டியும், இளைய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் பிசிசிஐ ஓய்வு பெற அழுத்தம் தருவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே-வில் ஆடி வருகின்றனர். மும்பை அணிக்காக ரோகித் சர்மாவும், டெல்லி அணிக்காக கோலியும் ஆடி வருகின்றனர்.

ரோகித் சர்மா சதம்:

மும்பை அணிக்கு எதிராக ஆடிய சிக்கிம் அணி அவர்களுக்கு 237 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, மும்பை அணிக்காக ரோகித் சர்மா - ரகுவன்ஷி ஆகிய இருவரும் களமிறங்கினர். ரகுவன்ஷி நிதானமாக ஆட ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். பட்டாசாய் வெடித்த ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இதனால், மின்னல் வேகத்தை இலக்கை நோக்கி நெருங்கியது மும்பை அணி. ரோகித் சர்மா 94 பந்துகளில் 18 பவுண்டரி 9 சிக்ஸருடன் 155 ரன்கள் எடுத்து அவுட்டானார். மும்பை அணி 30.3 ஓவர்களில் 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கோலியும் சதம்:

பெங்களூரில் நடந்த போட்டியில் ஆந்திரா - டெல்லி அணிகள் மோதின. ரிக்கி பூய் சதத்தால் 299 ரன்களை டெல்லிக்கு ஆந்திரா இலக்காக நிர்ணயித்தது. டெல்லி அணிக்காக பிரியன்ஷ் ஆர்யா - அர்பித் ராணா ஆட்டத்தை தொடங்கினர். அர்பித் ராணா டக் அவுட்டாகியதும் விராட் கோலி களமிறங்கினர். களமிறங்கியது முதலே தொடர்ந்து சிறப்பாக ஆடினார். அவருக்கு பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஒத்துழைப்பு அளிக்க, விராட் கோலி தனக்கே உரித்தான பாணியில் ஆடினார்.

அரைசதம் கடந்த விராட் கோலி சிக்ஸர் விளாசி சதம் விளாசினார். அவர் 101 பந்துகளில் 14 பவுண்டரி 3 சிக்ஸருடன் 131 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிரியன்ஷ் ஆர்யா 74 ரன்களும், நிதிஷ் ராணா 77 ரன்களும் எடுக்க 37.4 ஓவர்களில் 300 ரன்களை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

ஆதிக்கம் செலுத்தும் முன்னாள் கேப்டன்கள்:

இவர்கள் இருவருக்கும் 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் இடம் சந்தேகம் என்று பிசிசிஐ அழுத்தம் தருவதாக தகவல் வெளியானது முதலே இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா ஆதிக்கம் செலுத்தவும், தென்னாப்பிரிக்க தொடரில் விராட் கோலியும் ஆதிக்கம் செலுத்த இந்திய அணியின் ஒருநாள் பேட்டிங் இவர்கள் இருவரை ம்ட்டுமே நம்பியுள்ளதை தரவுகளும் காட்டுகிறது. விஜய் ஹசாரேவில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சதம் விளாசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.