உணவகத்தில் பணிபுரிந்த சிறுவர்கள்

சென்னை ஆலந்துார் உள்ளகரம் அலெக்ஸ் தெருவில் ஸ்டார் மவுன்ட் என்கிற உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாஸ்டராக பணிபுரியும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த குமார் (வயது 54 ) என்பவருக்கு கொருக்குப்பேட்டையை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். போதைக்கு அடிமையான குமார் , சிறுவர்களிடம் மது வாங்கி தரும் படி அடிக்கடி வம்பிழுத்ததாக்கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் அசந்து துாங்கி கொண்டிருந்த மூன்று சிறுவர்களையும் போதையில் இருந்த குமார் எழுப்பியுள்ளார்.

காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தறுப்பு

இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் , காய்கறி வெட்டும் கத்தியால் குமாரின் கழுத்தை அறுத்து தப்பினர். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு15 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து , தலைமறைவான மூன்று சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

தீபாவளி சீட்டு நடத்தி 1 கோடி ரூபாய் மோசடி. மோசடி செய்த குடும்பத்தினரை கைது செய்ய பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தல்

சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தம்பதி சாந்தகுமார் , செந்தில் அரசி. இவர்களின் மகன் விக்னேஸ்வரன்.

இவர்கள் வி.எஸ்.பி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் 2024 - ம் ஆண்டு தீபாவளி தங்க நகை சீட்டு நடத்தினர். அவர்கள் 500 பேரிடம் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பணம் கட்டி ஏமாந்த , 30க்கும் மேற்பட்டோர் மாதவரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், திரு.வி.க.நகர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் மாதவரம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆன்லைன் டிரேடிங் , ஆசை வார்த்தை கூறி ரூ. 1 கோடியை ஏமாற்றிய மர்ம நபர்கள்

அம்பத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 64) கடந்த ஜனவரி மாதம் , இவரது மொபைல் போன் எண்ணிற்கு, ஆன்லைன் டிரேடிங் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை ராமசாமி தொடர்பு கொண்டு பேசிய போது ஆன் லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக 1.04 கோடி ரூபாய் வரை அனுப்பியுள்ளார். இது குறித்து பிப்ரவரி மாதம் ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

வங்கி கணக்குகளை வைத்து விசாரித்த போலீசார், சென்னை பாரிமுனை பகுதியில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கும்பா வெங்கடேசன், 30, மங்களூரைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் அல்தாப் உசைன், 22, ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் கமிஷன் தொகைக்கு ஆசைப் பட்டு மோசடி நபர்களுக்கு தங்களின் வங்கி கணக்கை கொடுத்து உதவியது தெரிந்தது. இதையடுத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப் இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.