கிளாம்பாக்கம் அருகே கள்ளக்காதலி திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை கொலை செய்ய முயற்சித்த காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதல் மனைவி

செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த காரணைப்புதுச்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (25). விஜய் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரி மகள் புஷ்பலதா (27) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் தன் சகோதரி மகள் புஷ்பலதாவை விஜய் திருமணம் செய்துள்ளார்.

இருவருடைய திருமண வாழ்க்கையும் ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் திருமணம் கசக்க தொடங்கி இருக்கிறது. இந்தநிலையில், விஜய்க்கும் செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த, ஸ்ரீமதி என்ற திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலியுடன் உல்லாசம்

ஸ்ரீமதி மற்றும் விஜய் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகத் தொடங்கியுள்ளனர். ஸ்ரீமதி மற்றும் விஜய் ஆகிய இருவருடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

ஸ்ரீமதி மற்றும் விஜய் நெருங்கி பழகிய நிலையில், ஒரு கட்டத்தில் ஸ்ரீமதி விஜயை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜயும் ஸ்ரீமதியை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து கடந்த 20ஆம் தேதி ஸ்ரீமதியை திருமணம் செய்யப் போவதாக தன் மனைவி புஷ்பலதாவிடம் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நியாயம் கேட்டு சண்டை போட்ட மனைவி

இந்த தகவலை கேட்ட புஷ்பலதா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தன் கணவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வது குறித்து தகவல் அறிந்து கடும் ஆத்திரமடைந்துள்ளார். இந்த திருமணம் நடக்கக்கூடாது என புஷ்பலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த எதிர்ப்பு பெரிய சண்டையாக மாறி உள்ளது.

இதனால் கோபமடைந்த விஜய் வீட்டில் அருகே இருந்த கல்லை எடுத்து புஷ்பலதாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் காயம் அடைந்த புஷ்பலதா ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். அலறல் சட்டம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த புஷ்பலதாவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். புஷ்பலதாவிற்கு தனியார் மருத்துவமனையில் 18 தையல்கள் போடப்பட்டுள்ளது.

கணவனை கைது செய்த போலீஸ்

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து புஷ்பலதா அளித்த புகாரின் அடிப்படையில் விளாம்பகம் போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனைவியை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.