டெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "கடந்த பத்தாண்டுகளில், மத்திய அரசின் தலைமையின் கீழ் இந்தியாவின் பள்ளிக் கல்வி முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது.

நமது பள்ளிகள் கற்றல் மையங்களாக மட்டுமின்றி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வாய்ப்பு, திறன் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை வழங்கும் இடமாகவும் உள்ளது. அரசின் முயற்சிகள், பள்ளி உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன.

"உந்து சக்தியாக உருவெடுத்த பெண்கள்"

மின்சாரப் பயன்பாடு 53 சதவீதத்திலிருந்து 91.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கணினிகளுக்கான அணுகல் 24.1%-லிருந்து 57.2% ஆகவும், இணைய வசதிகள் பயன்பாடு 7.3%-லிருந்து 53.9% ஆகவும் அதிகரித்துள்ளன. குடிநீர் கிடைப்பது 83.2% முதல் 98.3% ஆகவும், கை கழுவுதல் வசதிகள் 43.1%-லிருந்து 94.7% ஆகவும் உயர்ந்துள்ளன.

விளையாட்டு மைதானங்கள் 66.9 சதவீதத்தில் இருந்து 82.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. நூலக வசதிகள் 76.4%-லிருந்து 89% ஆக விரிவடைந்துள்ளன. மழைநீர் சேகரிப்பு வசதிகள் 4.2 சதவீதத்தில் இருந்து 28.4 சதவீதமாக உயர்ந்துள்ளன.

2013-14 ஆம் ஆண்டில் ரூ.10,780 ஆக இருந்த ஒரு குழந்தைக்கான செலவு 130%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டில் ரூ.25,043 ஆக உயர்ந்துள்ளது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தற்போது 23 இந்திய மொழிகளில் கிடைக்கின்றன.

தீக்ஷா தளத்தில் 126 இந்திய மொழிகள் மற்றும் 7 வெளிநாட்டு மொழிகளில் பன்மொழி மின்-உள்ளடக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரத்யேக கல்வி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி, தமிழ் மொழி சேனல் ஒன்று தொடங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் என்ன பேசினார்?

வயது வந்தோர் கல்விக்கான உல்லாஸ்(ULLAS) சேனல் செப்டம்பர் 8ஆம் தேதி துவங்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 64% அதிகரித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பாக செயல்படும் மாணவர்களின் எண்ணிக்கை 66% அதிகரித்துள்ளது.

கல்வியில் பெண்கள் ஒரு உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர். 2014 முதல் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை 30% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 2014 மற்றும் 2024 க்கு இடையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களில் 61% க்கும் அதிகமானோர் பெண்கள்.

பெண் ஆசிரியர்கள் இப்போது ஆண் ஆசிரியர்களை விட கணிசமாக உள்ளனர். நவோதயா பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களின் பிரதிநிதித்துவம் 2014-ல் 78% ஆக இருந்தது. 2024-ல் 90% ஆக அதிகரித்துள்ளது.

27% ஓபிசி இடஒதுக்கீடு 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிரதிநிதித்துவம் நவோதயா பள்ளிகளில் 38.83% மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 29.33% ஐயும் எட்டியுள்ளது. கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளின் எண்ணிக்கை 1,701 லிருந்து 1,943 பள்ளிகளாக உயர்ந்துள்ளது.

நீட் தேர்வில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி ஜேஇஇ முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர். 2,000+ மாணவர்கள் ஐஐடி-க்களில் சேர்க்கை பெற்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்ட அனுமதி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 2014இல் 14,974 ஆக இருந்து 2024 இல் 30,415 ஆக அதிகரித்துள்ளது. தொழிற்கல்வி கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தொழிற்கல்வி வழங்கும் பள்ளிகள் 2014 இல் 960 ஆக இருந்து 2024 இல் 29,342 ஆக உயர்ந்துள்ளன.

திறன் கல்வியில் மாணவர் சேர்க்கை 2014-ல் 58,720 ஆக இருந்தது, 2024-ல் 30.8 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தில் டிஜிட்டல் சீர்திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது" என்றார்.