தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ளது மகா சரஸ்வதி அம்மன் கோவில். கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோவில்களுள் இதுவும் ஒன்றாகும்.

மயிலாடுதுறை- திருவாரூர் ரயில் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோவில் உள்ளது. சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிடுகின்றனர். இதில் இருவருக்கும் இடையில் வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து கொள்கின்றனர்.

இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் இருவரும் அவதரிக்கின்றனர். இவர்களுக்கு திருமண வயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வருகிறது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர்.

பெற்றோருக்கு இவ்விஷயம் தெரிய வந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில் சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்கின்றனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள் திருமணம் செய்வது என்பது இயலாத காரியம். எனவே சரஸ்வதி மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கு என்று அருள்பாலித்தார்.

அதன்படி கன்னி சரஸ்வதியாக கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது என்பது ஸ்தல வரலாறு. தமிழ்நாட்டிலேயே சரஸ்வதி தேவிக்கென தனியாக அமைக்கப்பெற்ற ஒரே கோவிலாகும்.

இவ்வூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் ‘கூத்தனூர்’ என்று வழங்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. ஒட்டக்கூத்தர் தான் இக்கோவிலைக் கட்டினார் என்றும் தலபுராணம் வாயிலாக அறிய முடிகிறது.

இக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். வெண்பட்டு உடுத்தி வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும் வலது மேல் கையில் அட்சர மாலையுடனும் இடது மேல் கையில் அமுத கலசத்துடனும் ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார். பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக இக்கோயிலுக்கு குழந்தைகளை அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் குறித்து வைப்பதும் உண்டு. கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உள்ளது.