கரூரில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்ற முன்பகை காரணமாக ஜீவாவை தொழிற்பேட்டை சிட்கோ வளாகத்தின் பின்புறம், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கட்டிடங்களுக்கு பின்புறம் உள்ள முள்காட்டில் மது அருந்துவதற்காக வரவழைத்து அவரை கை, கால், தலை என 6 துண்டுகளாக வெட்டி அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.

மாயமான இளைஞர்:

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு காந்தி கிராமம், கம்பன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜீவா (வயது 19). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று அவரது செல்போன் அணைக்கப்பட்டது.

ஜீவாவை அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் அவரது அம்மா சுந்தரவள்ளி கடந்த 22-ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் மாயமான ஜீவா பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

துண்டு, துண்டாக வெட்டிக்கொலை:

அப்போது, செல்போன் அணைக்கப்பட்ட இடத்திலிருந்து, உபயோகப்படுத்தப்பட்ட செல்போன் எண்களை கொண்டு 9 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு வடக்கு காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்த மோகன்ராஜை அவரது நண்பரான தர்மா (எ) கிருஷ்ணமூர்த்தி மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த மோகன்ராஜின் உயிர் நண்பரான சசிகுமார், அக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்ற முன்பகை காரணமாக ஜீவாவை தொழிற்பேட்டை சிட்கோ வளாகத்தின் பின்புறம், பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கட்டிடங்களுக்கு பின்புறம் உள்ள முள்காட்டில் மது அருந்துவதற்காக வரவழைத்து அவரை கை, கால், தலை என 6 துண்டுகளாக வெட்டி அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.

9 பேர் கைது:

இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய சசிக்குமார், மதன், சுதாகர், பாண்டி என்ற பாண்டீஸ்வரன், மதன் கார்த்திக், ஹரிபிரசாத் என்ற பந்தி, சந்துரு, ஜெபா என்ற அருண்குமார், 18 வயது நிரம்பாத சிறுவன் உட்பட 9 இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்பகை காரணமாக இக்கொலை நடந்திருப்பதை ஒப்புக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான சசிக்குமார், மதன் ஆகியோரை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எடுப்பதற்காக பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர்கள் தப்பியோட முயற்சித்த போது வழுக்கி விழுந்ததில், சசிக்குமாருக்கு கால் எழும்பு முறிவு ஏற்பட்டது. மதனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீதமுள்ள 7 இளைஞர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 பேரை திருச்சி மத்திய சிறைக்கும், 18 வயது நிரம்பாத சிறுவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர் திருத்தப்பள்ளிக்கும் போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும், தப்பியோடிய கபில் என்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.