தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடந்த 5 டன் குப்பைகளை ஒரே நாளில் அகற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சால்வை அணிவித்து பாராட்டினார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம். கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 480 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்கள்.

மேலும், திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த செல்வன் சுவர் இடிந்து விழுந்து இறந்ததற்காக அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், பாம்பு கடித்து இறந்த பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த நபரின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.

இதேபோல் வெளிநாட்டில் பணியின் போது கும்பகோணம் வட்டத்தைச் சார்ந்த இறந்த நபரின் குடும்பத்தினருக்கு சட்டப்படியான நிலுவைத் தொகை ரூ.2.45,654 க்கான காசோலையை மாவட்டம்கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி 20 தூய்மைப் பணியாளர்கள் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் தேங்கி கிடந்த 5 டன் குப்பைகளை ஒரே நாளில் அகற்றியதை பாராட்டி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் இந்த பணிக்கு விரைந்து முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்த மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்திக்கும் சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார். பின்னர் கலெக்டர் கூறுகையில், நம் வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நாம் யோசிக்கின்றோம். ஆனால் ஆடிப்பெருக்கு விழா அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து பணியாற்றி அங்கிருந்த குப்பைகளை முழுமையாக அகற்றிய மாநகர் நல அலுவலர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் மற்றும் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா சோழன் மாளிகை அருகில் உள்ள பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 5 கோடி மதிப்பு நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் இதற்கு துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சுமார் 2.5 ஏக்கர் நிலம் சோழன் மாளிகை கிராமத்தை சேர்ந்த துரை ரத்தினம் என்பவரால் தானமாக வழங்கப்பட்டது. இக்கோயிலுக்கு பூசாரிகளாக பக்கத்து ஊரிலிருந்து சிலர் அழைத்து வரப்பட்டு கோவில் இடத்தில் தங்க வைக்கப்பட்டு பூஜை செய்ய அமர்த்தப்பட்டனர்.

தற்போது 25 ஆண்டுகளுக்குள் கோயில் தர்மகர்த்தா என்று பூசாரி குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அறநிலையத்துறை அதிகாரிகள் கிராமத்தில் உள்ள யாரையும் கலந்து ஆலோசிக்காமல் நியமனம் செய்துள்ளனர். அவர் கோதண்ட ராமசாமி கோயில் நிலத்தில் குடியிருக்கிறார். இவர் கோயிலை எதிர்த்து தான் குடியிருக்கும் இடம் சம்பந்தமாக வழக்கு நடத்தி வருகிறார்.

மேலும் கோயிலுக்கு வரும் நன்கொடை அனைத்தையும் ரசீது கொடுக்காமல் எடுத்துள்ளார்.. இதற்கு அறநிலையத்துறையில் உள்ள ஒரு சிலர் துணை போய் உள்ளனர். இந்நிலையில் தற்போது அவர் மீது கோயில் சொத்துக்களை அபகரித்தது மற்றும் கோயில் வருமானங்களை சுரண்டியது தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு பதிலாக அவரது மகனை நியமித்துள்ளனர்.

இக்கோயில் சொத்துக்களின தற்போதைய மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகும். இதை பூசாரிகள் ஒரு சிலர் பட்டா வாங்கி எங்கள் இடம் என அனைத்து இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு துணைப் போன அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறையினர மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு திரும்பவும் கோயிலுக்கே வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.