" ஏன் சத்தம் போடுகிறீர்கள் " என்று கேட்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !! சென்னையில் பரபரப்பு

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 30 வயது பெண் ஓட்டேரி பகுதியில் உள்ள ஒரு நூலகத்தில் நூலகர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 09.11.2025 அன்று மேற்படி நூலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் நூலகத்தில் சத்தம் போடவே எதற்காக சத்தம் போடுகிறீர்கள் என்று அப்பெண் கேட்டபோது , அந்த நபர் ஆபாசமாக பேசி, அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் 17 ம் தேதி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை பெரம்பூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் ( வயது 45 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சம்பத்குமார், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி , மென்பொறியாளரிடம், 24 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சுதா கார்த்திக் ( வயது 44 ) மென்பொறியாளர். கடந்த பிப்ரவரி 10 - ம் தேதி, சேத்துப்பட்டில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தனது வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நினைத்து, பல்வேறு தவணையாக, 24.89 லட்சம் ரூபாயை முதலீடு செய்தேன். பின், முதலீடு செய்த பணத்திற்கு எந்தவித லாபத்தையும் தராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

எனவே, தன்னிடம் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என, குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், புகார்தாரர் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் மொபைல் போன் எண் விபரங்கள் ஆகியவற்றை வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மோசடியில் ஈடுபட்ட தீபா, 26, என்ற பெண், கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. பின் அங்கு சென்ற தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் தீபாவை கைது செய்தனர்.