தஞ்சாவூர்: நடுக்கடலில் தத்தளித்தவர்கள் கஞ்சா கடத்தியவர்களா என்று மீட்டு கொண்டு வந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், ராமச்சந்திரன் என்ற மீனவர்கள், மறவக்காடு கடற்பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணியளவில், மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, டீசல் கேனை பிடித்தப்படி இருவர் தத்தளித்துக்கொண்டு இருந்தனர். அவர்களை கண்ட சுப்பிரமணியன், ராமசந்திரன் கடலில் தத்தளித்த இருவரையும் மீட்டனர்.

மேலும், மீட்கப்பட்ட இருவரின் அருகே ஏழு மூட்டைகள் மிதந்துள்ளன. இதுகுறித்து, சுப்பிரமணியன் அதிராம்பட்டினம் கடலோர போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு, மீட்கப்பட்ட இரண்டு நபர்களையும், மூட்டைகளையும் தங்களின் படகில் ஏற்றிக்கொண்டு, கீழத்தோட்டத்திற்கு வந்தனர். அங்கு சென்ற, அதிராம்பட்டினம் கடற்கரை போலீசார், மூட்டைகளை பிரித்து பார்த்த போது, கஞ்சா பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளையும், மீட்கப்பட்ட இருவரையும் அதிராம்பட்டினம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிராம்பட்டினம் போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை, தலைமன்னார் பகுதியை சேர்ந்த அமலதாசன் மகன் அஜந்தன் (36), வரப்பிரகாசம் மகன் ஜீவானந்தம் (51) என்பதும் தெரியவந்தது. மேலும், தமிழகத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் மூலம், சர்வதேச எல்லையில், கஞ்சா மூட்டைகளை படகில் மாற்றி இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளனர். ஆனால், படகு சேதமடைந்த நிலையில், தண்ணீரில் படகு மூழ்கியது என்பதும் தெரிய வந்தது.

இருப்பினும், அஜந்தன், ஜீவானந்தம் இருவரும் கஞ்சா மூட்டையை உடலில் கட்டிக்கொண்டு, கடலில் தத்தளித்துள்ளனர். காற்றின் வேகத்தால், இந்திய கடல்பகுதியில் வந்ததால், கீழத்தோட்டம் மீனவர்களால் அஜந்தன், ஜீவானந்தம் மீட்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசார், அஜந்தன், ஜீவானந்தம் இருவரையும் கைது செய்து, ஏழு மூட்டைகளில் இருந்த 90 பண்டல்கள் அடங்கிய சுமார் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை பறிமுதல், கடல் வழியாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிராம்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.