BS Yediyurappa: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அடுத்த விசாரணைை நடைபெறும் வரை அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவோ, கைது செய்யவோ கூடாது, என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் (போக்சோ) கீழ் எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் நேற்று பிறப்பிக்கப்பட்டது. இந்த புகாரில் துளி அளவு கூட உண்மை இல்லை என எடியூரப்பாவின் மகன் பி. ஒய். ராகவேந்திரா விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த கர்நாடக பாஜக, "மக்களவை தேர்தலில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர்கள், பாஜவுக்கு எதிராக ஒன்றன் பின் ஒன்றாக சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக மீது வெறுப்படைந்த காங்கிரஸ், மனநலம் குன்றிய பெண்ணின் புகாரின் அடிப்படையில் நமது மதிப்பிற்குரிய தலைவர் பி.எஸ். எடியூரப்பாவை கைது செய்ய முயற்சித்து வருகிறது. கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தை எதிர்கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என விமர்சித்துள்ளது.