விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு நூதன முறையில் உடல் முழுவதுமாக 120 மது பாட்டில்களை டேப் போட்டு ஒட்டி கடத்தி வந்த நபரை விழுப்புரம் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக நடந்து சென்ற நபரை அழைத்து விசாரனை செய்தனர். விசாரனையில் விழுப்புரம் ஜி ஆர் பி தெருவை சார்ந்த நாகமணி என்பதும் இவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை விழுப்புரம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை செய்தனர்.

அப்போது புதுச்சேரியிலிருந்து நாகமணி மதுபாட்டில்களை வாங்கி உடம்பு முழுவதும் டேப் போட்டு மதுபாட்டில்களை ஒட்டிக்கொண்டு பேருந்து மூலமாக பயணம் செய்து விழுப்புரத்திற்கு வந்து மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து உடலின் கை,கால்கள், மார்பு பின் புற தோள் பட்டை என உடல் முழுவதுமாக மதுபாட்டில்களை நூதனமாக ஒட்டி எடுத்து வந்த 120 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து நாகமணியை கைது செய்தனர்.

இதேபோல், இருசக்கர வாகனத்தில் நூதனமாக பெட்ரோல் டேங்க் மற்றும் சீட்டிற்கு அடியில் வைத்து புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்து இருவரை விழுப்புரம் மதுவிலக்கு போலீசார் கைது செய்து 190 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் அருகே மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேக படும் படியாக வந்த இருவரை பிடித்து விசாரனை செய்ததில் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை செய்தபோது புதுச்சேரி எல்லை பகுதியான மதகடிப்பட்டிற்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி அதனை இருசக்கர வாகனத்தில் பிரத்தேகமாக பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கையின் கீழ் அறை அமைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விழுப்புரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஜி ஆர் பி தெருவை சார்ந்த ஆனந்தபாபு, சரன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த சிறிய ரக 190 மதுபாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்கள் கடத்தி வந்த இருவரும் ஜிஆர்பி தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.