நடிகை ஸ்ரீதேவி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என பிரபல நடிகை பாக்யஸ்ரீ நேர்காணலில் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் நடிகையாக எடை கூட்டும் பொருட்டு ஊசி போட்ட கதையையும் அதில் கூறியிருந்தார். அதனைப் பற்றிக் காணலாம்.

கடந்த 1982ம் ஆண்டு தேவியின் திருவிளையாடல் படம் மூலம் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தவர் பாக்யஸ்ரீ. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் சீரியலிலும் நடித்து இக்கால ரசிகர்கள் மனதிலும் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் பார்வதி என்ற கேரக்டரில் நடித்து பாராட்டைப் பெற்று வருகிறார்.

இவர் முன்னதாக கொடுத்த நேர்காணலில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பேசியிருப்பார். அதில், “எனக்கு நடிப்பின் மீது தீவிர ஆசை இருந்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். என்னுடைய பெரியப்பா இயக்குநராக இருந்தார். அவரிடம் விஷயத்தை சொல்ல சில தயாரிப்பாளர்களிடம் அறிமுகம் செய்தார். அப்படித்தான் 12 வயதில் தேவியின் திருவிளையாடல் படத்தின் மூலம் நான் சினிமாவில் அறிமுகமானேன். சென்னையில் தான் எல்லா படங்களின் ஷூட்டிங் நடக்கும் என்பதால் தெலுங்கு, மலையாளம் படங்கள் எல்லாம் பண்ணினேன்.

இப்போது எங்கு போனாலும் சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி தான் பேசுகிறார்கள். சின்ன பசங்க கூட என்னை அடையாளம் காண்கிறார்கள். படங்களை விட சீரியல்கள் மூலம் நல்ல ரீச் கிடைக்கிறது. மீண்டும் நான் சினிமாவுக்குள் செல்வேன் என நினைக்கிறேன்.

நான் திருமணத்திற்கு பிறகு குஜராத்தில் செட்டிலாகி விட்டேன். அதனால் மீண்டும் சென்னைக்கு வந்து நடிக்க முடியாது என நடிப்பை விட்டு விட்டேன். மகனின் படிப்புக்காக சென்னை வந்த பிறகு இங்கு பார்ப்பவர்கள் மீண்டும் நடிக்கலாமே என கேட்க அப்படியே சீரியலுக்குள் வந்தேன். நான் காதல் திருமணம் தான் செய்தேன். என் கணவர் நடிக்க விருப்பம் இருந்தால் நடிக்கட்டும் என கூறினார். ஆனால் குஜராத்தில் இருந்ததால் வேண்டாம் என முடிவெடுத்தேன்.

சினிமாவில் இருந்தால் இடைவெளி எடுக்கக்கூடாது. மீண்டும் அந்த இடத்துக்கு போக வேண்டியது சிரமமாக உள்ளது. நான் நடிக்க வேண்டிய கேரக்டரில் சில நேரங்களில் வேறு யாராவது செலக்ட் ஆகி விடுவார்கள். இல்லையென்றால் ரொம்ப ஒல்லியாக இருக்கிறீர்கள், அதனால் கேரக்டருக்கு செட்டாக மாட்டீர்கள் என சொல்வார்கள்.

அப்போது தான் ஹீரோயினாக நடிக்க கொஞ்சம் எடை கூட வேண்டும் என ஊசி எல்லாம் போட்டேன். ஆனால் ஊசி போட்ட கொஞ்ச காலத்திலேயே ஐந்து மொழிகளில் நடித்து விட்டேன். மருத்துவர்கள் ஊசி போட வேண்டாம் என எச்சரித்தார்கள். இருந்தும் நான் எடுத்துக் கொண்டேன்” என நடிகை பாக்கியலட்சுமி தெரிவித்திருப்பார்.